ஸ்ரீதேவி மரணம் மீது இனி விசாரணை கிடையாது- உச்ச நீதிமன்றம் உத்தரவு
By Rahini A
நடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்து கூடுதல் விசாரணை வேண்டும் என இயக்குநர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்திய திரை துறையில் 50 ஆண்டுகள் கோலோச்சிய தலைசிறந்த நடிகையாகக் கருதப்படுபவர் ஸ்ரீதேவி. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் யாரும் எதிர்பாராத வகையில் துபாயில் காலமானார். ஸ்ரீதேவியின் இறப்புக்கு அவரது ரசிகர்களும் குடும்பத்தாரும் இன்னும் பல்வேறு வகைகளில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், ஸ்ரீதேவி மரணம் குறித்த விசாரணை மறு ஆய்வு செய்யப்படும் வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் இயக்குநர் சுனில் சிங் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கின் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.
விசாரணையில், ‘நடிகை ஸ்ரீதேவிக்கு ஓமனில் சுமார் 200 கோடிக்கு நிகரான லைஃப் இன்சூரன்ஸ் பாலிஸி உள்ளது. இதன்படி அவர் அரபு நாடுகளில் இருக்கும்போது அவரது உயிருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால்தான் அந்தப் பணம் கிடைக்கும் என்ற சூழல் இருந்தது” என வழக்கு தொடர்ந்த இயக்குநர் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
ஆனால், தலைமை நீதிபதி, “இதே வாதம் தொடர்பாக இதுவரையில் இரண்டு முறை தீர்ப்பு வழங்கிவிட்டோம். இனியும், மரணத்தில் சந்தேகம் கொண்டு விசாரணை செய்ய இயலாது” எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்துவிட்டார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com