கர்நாடகா சட்டமன்ற தேர்தல்: ஒரு தொகுதிக்கு மட்டும் இன்று தேர்தல் இல்லை
அண்டை மாநிலமான கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில் பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரி ஜலஹள்ளி தொகுதியில் மட்டும் தேர்தல் நடைபெறாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சித்தராமையா ஆட்சி பொறுப்பேற்று 5 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் அடுத்த முதல்வருக்கான போட்டி தயாராகி இன்று இறுதி போர் நடக்கவுள்ளது. 2013ல் சித்தராமையா பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மே 12ந் தேதி (இன்று) சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் முடிவுகள் இதே மாதம் 15ம் தேதி கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்று தெரிந்துவிடும்.
இந்நிலையில் பெங்களூருவில் உள்ள ராஜராஜேஸ்வரி நகர் ஜலஹள்ளி தொகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாக்காளர் அடையாள அட்டை குவியல் குவியல்களாக அச்சடிக்கப்படுவதாக ரகசிய தகவல் வந்தது.
இதனை அறிந்த தேர்தல் அதிகாரிகள் ஒரு குழுவாக அந்த குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்புக்குள் அதிரடியாக சென்று சோதனை செய்தனர். இதில், வாக்காளர் அடையாள அட்டை தயாரிக்க வைக்கப்பட்டிருந்த பிரின்டர்கள், கணினிகள் மற்றும் சுமார் 9 ஆயிரத்திற்கும் மேல் இருந்த போலி வாக்காளர் அடையாள அட்டைகளை தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றினர்.
இது தொடர்பான தகவல்கள் கர்நாடக தேர்தல் தலைமை அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டது இதன் எதிரொலியாக அந்த ஒரு குறிப்பிட்ட தொகுதிக்கு மட்டும் நாளை (இன்ற) தேர்தல் நடைபெறாது என்றும் ஜலஹள்ளி தொகுதிக்கு மட்டும் 28ந் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com