கனடா அமைச்சருக்கு அவமதிப்பு - வருத்தம் தெரிவித்தது அமெரிக்கா

கனடா தேசத்தின் கண்டுபிடிப்பு, அறிவியல் மற்றும் பொருளாதார மேம்பாட்டுத் துறை அமைச்சர் நவ்தீப் பெய்னுக்கு டெட்ராய்ட் விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரியால் நேர்ந்த சிரமத்திற்கு அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை மன்னிப்பு கோரியுள்ளது.

2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனக்கு நேரிட்ட இக்கட்டு குறித்து நவ்தீப் பெய்ன் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். சீக்கியரான இவர், வழக்கமாக எந்த விமான நிலையத்திலும் தான் யார் என்பதை கூறுவதில்லை. பொதுமக்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றனர் என்பதை அறிவதற்காக தாம் இதை வழக்கமாகவே வைத்திருப்பதாக பெய்ன் கூறியுள்ளார்.

முதலாவது மெட்டல் டிடக்டர் வழியாக தான் கடந்து சென்றதாகவும், தலையில் தலைப்பாகை அணிந்திருந்ததால் மீண்டும் ஒரு சோதனை நடத்தப்பட்டதாகவும் பெய்ன் கூறினார். இரண்டும் முடிந்த பிறகும், வேறொரு சோதனை கருவியின் வழியாக கடந்து செல்லக்கூறியதாகவும், அந்த இயந்திரம் சரியாக இயங்காததால் எச்சரிக்கை ஒலி எழுப்பியதாகவும் கூறினார்.

எல்லா சோதனைகளும் முடிந்த பிறகு, விமானத்தில் ஏறுவதற்கு 20 நிமிடங்கள் இருந்தவேளையில் ஒரு பாதுகாப்பு அதிகாரி மீண்டும் வந்து, இன்னும் சோதனை நடத்தப்பட வேண்டுமென்று கூறி, தலைப்பாகையை அகற்றும்படி வலியுறுத்தியதாகவும், வேறு வழியில்லாமல் தனது டிப்ளோமேட் பாஸ்போர்ட்டை காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டதாகவும் நவ்தீப் பெய்ன் கூறியுள்ளார்.

இந்த விஷயம் தொடர்பாக கனடா தலைநகர் ஒட்டாவாவிலிருந்து அதிகாரிகள் அமெரிக்க தூதரகம் மற்றும் வாஷிங்டனுக்கு பேசியதாகவும் அதைத் தொடர்ந்து அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு துறை மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு துறை சார்பாக வருத்தம் தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

கனடா அமைச்சர் சோதிக்கப்பட்ட ஒளிப்பதிவு காட்சிகளை ஆய்வு செய்த அமெரிக்க அதிகாரிகள், சோதனை செய்த பாதுகாப்பு அதிகாரிக்கு போதிய பயிற்சி இல்லாததே காரணம் என்று கண்டறிந்து அவரை மீண்டும் பயிற்சிக்காக அனுப்பியதாக கூறப்படுகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>