ஈரான் குறித்த ட்ரம்ப் முடிவு பிரான்ஸ் எதிர்ப்பு
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் மேல் பொருளாதார தடை விதிக்கும் அமெரிக்காவின் முடிவு ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று பிரான்ஸ் கூறியுள்ளது.
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்கா முறித்துக்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் உடன் பங்காளர்களான மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்காவின் முடிவு ஏற்கத்தக்கதாக இல்லை. ஈரானுடன் வர்த்தகம் செய்த நிறுவனங்கள் ஆறு மாதங்களுக்கு வர்த்தக நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டுமென்றும், புதிய ஒப்பந்தம் எதையும் செய்து கொள்ளக்கூடாது என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. இதை மீறும் நிறுவனங்கள்மேல் பொருளாதார தடை விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
பிரான்ஸின் வெளியுறவு துறை அமைச்சர் ஜீன் ஒய்வெஸ் லே டிரைன், ஐரோப்பிய நிறுவனங்கள் அமெரிக்காவின் முடிவை பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தில் இணைந்துள்ள மற்ற நாடுகளின் கருத்துகளுக்கு அமெரிக்கா உரிய மரியாதையளிக்க வேண்டும் என்றும், அமெரிக்காவின் ஒப்பந்த முறிவு முடிவு இப்போதே எண்ணெய் விலை ஏற்றத்துக்கும், மத்திய கிழக்கில் அரசியல் நிலையின்மைக்கும் வழி வகுத்துள்ளது என்றும் லே டிரைன் கூறியுள்ளார்.
ஏர்பஸ் விமான நிறுவனம், டோட்டல் எண்ணெய் நிறுவனம், ரெனால்ட் மற்றும் பீகோட் கார் நிறுவனங்கள் ஆகியவை ஈரானுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளவற்றுள் முக்கியமானவை.
பிரான்ஸின் பொருளாதார அமைச்சர் புரூனோ லே மைரே, அமெரிக்காவின் கொள்கைகள் உலகின் பொருளாதார கொள்கைகள் ஆக முடியாது. இன்னும் சில நாட்களில் ஐரோப்பிய ஆணையத்துக்கு பிரான்ஸ் பொருளாதார தடை குறித்து முக்கிய பரிந்துரைகளை செய்யும் என்று கூறியுள்ளார்.
ஜெர்மனி பொருளாதார அமைச்சர் பீட்டர் அல்ட்டமைர், நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகளை இயன்ற அளவு குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com