அமெரிக்கப் பள்ளியில் துப்பாக்கி சூடு-முன்னாள் மாணவனிடம் விசாரணை
வெள்ளியன்று காலை, கலிபோர்னியாவில் பள்ளி ஒன்றில், வகுப்பு நேரம் தொடங்குவதற்கு முன்பு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அது தொடர்பாக மாணவன் ஒருவனை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கலிபோர்னியா பாம்டேலில் ஹைலேண்ட் உயர்நிலைப் பள்ளி உள்ளது. வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு பள்ளிக்கூட நேரம் தொடங்குவதற்கு சற்று முன்பு அங்கு வந்த அப்பள்ளியின் முன்னாள் மாணவன் (வயது 14), அரை தானியங்கி துப்பாக்கி ஒன்றினால் பத்து முறை சுட்டுள்ளான். இதில் 15 வயது மாணவன் ஒருவனின் தோளில் காயம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த காவல்துறையினர் பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பள்ளியின் மேற்குப் பகுதியில் காலியான இடம் ஒன்றில் கிடந்த துப்பாக்கியை அவர்கள் கைப்பற்றினர்.
துப்பாக்கியால் சுட்ட மாணவன், தன் தந்தைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தான் வானத்தில் துப்பாக்கியால் சுட்டதாக கூறியுள்ளான். அவர் தங்கள் குடும்ப நண்பரான காவல்துறை அதிகாரியிடம் தகவல் தெரிவித்துள்ளார். அப்போது பணியில் இல்லாத அந்த காவல் அதிகாரி விரைந்து வந்து, பள்ளியின் அருகிலுள்ள கடை ஒன்றில் அப்பையனை பிடித்துள்ளார். முன்னதாக, மகன் வீட்டை விட்டு ஓடி விட்டதாக அவனது தாயார், தந்தைக்கு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.
காயமடைந்த மாணவனுக்கு மருத்துவமனையில் அறுவைசிகிச்சை நடந்தது. அவன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது. விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், அவனது உண்மையான நோக்கம் குறித்து விசாரித்து வருவதாகவும் லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்ட்டி ஷெரீப் ஜிம் மெக்டொனால்டு தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டில் அமெரிக்க பள்ளிகளில் நடந்த 21வது துப்பாக்கிச் சூடு என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com