வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு: உச்சநீதிமன்றம்

வன்கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்களுக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

நாட்டில், பல மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் பெண்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அவர்களது வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடுகிறது.

இதுபோன்ற வன்கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்களுக்கு ஒவ்வொரு மாநிலங்களுக்கு ஏற்ப நஷ்டஈடுகள் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், நாடு முழுவதும் ஒரே மாதிரியான நஷ்டஈடு வழங்குவது குறித்து தேசிய சட்ட சேவை ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதுதொடர்பான வரைவு திட்டத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில், இத்திட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.

இந்த திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள புதிய விதிப்படி கூட்டு பலாத்காரத்துக்கு ஆளாகும் பெண்களுக்கு குறைந்தபட்சம் ரூ.5 லட்சத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை நஷ்டஈடாக கிடைக்கும். மேலும், இயற்கைக்கு மாறான பாலியல் தாக்குதல்களுக்கு உள்ளாகும் பெண்கள் குறைந்தபட்சம் ரூ.4 லட்சத்தில் இருந்து அதிகபட்சம் ரூ.7 லட்சம் வரை நஷ்டஈடு பெற முடியும்.

இதைப்போல திராவக வீச்சுக்கு ஆளாகும் பெண்களுக்கு நஷ்டஈடு வரையறுக்கப்பட்டு உள்ளது. அதன்படி, 50 சதவீதத்துக்கு அதிகமான காயத்துக்கு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சம் வரை நஷ்டஈடு வழங்கப்படும். தீ வைத்து எரிக்கப்படும் பெண்களுக்கும் இந்த புதிய விதி பொருந்தும். அதனால், இத்திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

More News >>