சர்ரே அணியா... இந்திய அணியா?- குளறுபடியில் கேப்டன் விராட்!
இந்திய அணியின் நட்சத்திர வீரரும் கேப்டனுமான விராட் கோலி தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்.
பெங்களுரூ ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாகப் பட்டையைக் கிளப்பி வரும் கோலி, விரைவில் இங்கிலாந்து கிரிக்கெட் லீக் தொடர் ஒன்றிலும் விளையாட உள்ளார்.
இந்தியாவில் ஐபிஎல் எவ்வளவு பிரபலமோ அதுபோல், இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி தொடர் வெகு பிரபலம். அந்தக் கிரிக்கெட் தொடரில் கவுண்டி சர்ரே அணிக்காக ஜூன் மாதம் முழுவதும் விளையாடுவதற்காக விராட் கோலி ஒப்பந்தமாகியுள்ளார்.
இதனால் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கோலி பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அதே ஜூன் மாதத்தில்தான் அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டிகளில் கோலி கேப்டனாக விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து கவுண்டி தொடர், கோலி ஜூன் மாதம் முழுவதும் எங்களுக்குத்தான் என அறிவித்துள்ளபோது, அதே ’ஜூன் மாதத்தில் வரும் அயர்லாந்து தொடரில் கேப்டன் கோலி இந்தியாவுக்காக எப்படி விளையாடுவார்?’ என்ற கேள்வி எழுந்துள்ளது.
இக்கேள்விக்கு விராட் கோலி தரப்பிலிருந்து பதில் ஏதும் வெளியாகவில்லை. ஆனால், பிசிசிஐ இங்கிலாந்து கிரிக்கெட் சங்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கோலி இந்திய அணியின் அயர்லாந்து டி20 போட்டிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், இந்திய அணிக்கு சொந்த காரணங்களால் விளையாட முடியாமல் போனால் வேறு. அதுவே மற்றொரு நாட்டு அணிக்காக விளையாடுவதற்காக இந்தியக் கேப்டன் செல்கிறார் என்பது பெரியதொரு சர்ச்சையைக் கிளப்பும்.
இதிலிருந்து இந்திய அணியையும் விராட் கோலியையும் மீட்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது பிசிசிஐ.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com