மாணவர் விசாவுக்கு கெடுபிடி - அடுத்தடுத்து அதிர்ச்சி அளிக்கும் ட்ரம்ப்

ஹெச்-1 பி விசா விதிகள் கடுமை, ஹெச்-4 விசா ரத்து என்பதை அடுத்து அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் மீதும் ட்ரம்ப் அரசு கெடுபிடி காட்ட ஆரம்பித்துள்ளது.

விசா காலம் முடிந்து மாணவர்கள் தங்கியிருக்கும் காலத்தை சட்டவிரோதமாக தங்கியிருத்தல் என்று கடுமையான வார்த்தைகளால் ட்ரம்ப் அரசு சாடியுள்ளது.

விசா காலம் முடிந்து மாணவர்கள் தங்கியிருப்பதை தடைசெய்யும் வரைவு கொள்கையை வெள்ளியன்று அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது. இந்த கொள்கை வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் படிப்பதற்காக வரும் வெளிநாட்டு மாணவருக்கு எஃப்-F விசாவும், தொழிற்பயிற்சி மாணவருக்கு எம்-M விசாவும், ஆராய்ச்சி மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ, வணிக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பரிமாற்ற ரீதியிலான வருகையாளர்களுக்கு ஜே-J விசாவும் வழங்கப்பட்டு வருகிறது.

"குடிபுகலில் உண்மைத்தன்மையை உறுதிசெய்வதே அமெரிக்க குடியேறல் மற்றும் குடிபுகல் துறையின் பணியாகும். எஃப், ஜே, எம் என்று எவ்வகை மாணவரானாலும் குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே அமெரிக்காவினுள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட அக்காலம் முடிந்த பின்னர், அவர்கள் வெளியேற வேண்டும் என்றே எதிர்பார்க்கிறோம் அல்லது வேறொரு சட்டப்பூர்வமான குடிபுகல் அனுமதியை பெற்றுக்கொள்ளவேண்டும்," என்று அமெரிக்க குடியேறல் மற்றும் குடிபுகல் துறையின் இயக்குநர் பிரான்சிஸ் சிஸ்னா தெரிவித்துள்ளார்.

தற்போதைய விதிகளின்படி, அனுமதிக்கப்பட்ட காலம் முடிந்து தங்கியிருக்கும் மாணவர்களை, விதிமீறலை அதிகாரிகள் கண்டுபிடிக்கும் நாளிலிருந்து அல்லது குடிபுகல் நீதிபதி வெளியேறுவதற்கான ஆணை பிறப்பித்த பின்னரே சட்டவிரோதமாக தங்கியிருந்த நாட்கள் கணக்கிடப்படும். புதிய விதியின்படி, விசா காலம் முடிந்த நாளுக்குப் பின்னர் தங்கியிருக்கும் ஒவ்வொருநாளும் சட்டவிரோதமான தங்கலாகவே எடுத்துக் கொள்ளப்படும். உதாரணமாக எஃப்-1 வகை விசா வைத்திருக்கும் மாணவர், படிப்பு காலம் முடிந்து இன்னொரு வகை விசா (பணிக்கான விசா) வாங்குவதற்கு 60 நாட்கள் கருணை காலம் உண்டு.

புதிய வரைவு கொள்கையின்படி, ஒரு முறை படிப்பதற்காக வந்து விசா காலம் முடிந்து 180 நாட்கள் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் மாணவர் திரும்ப அமெரிக்காவுக்குள் நுழைய மூன்று அல்லது பத்து ஆண்டுகள் வரை தடை விதிக்கலாம்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>