விண்ணை எட்ட உயர்ந்து நிற்கும் மருந்துகளின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதற்கென அவரும் அமெரிக்க சுகாதாரம் மற்றும் மனித சேவை துறை செயலர் அலெக்ஸ் அஸாரும் சேர்ந்து ஒரு திட்டத்தை அறிவித்தனர்.
இந்தத் திட்டத்தின்படி, மருந்து உற்பத்தி நிறுவனங்களிடையே போட்டியை உருவாக்கி விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், மருந்து உற்பத்தி நிறுவனங்கள் எல்லா விளம்பரங்களில் மருந்துகளின் விலையை குறிப்பிடவும் அரசு கேட்டுக்கொள்ளும் என்றும் தெரிகிறது. இதன்படி, அமெரிக்க மருந்து நுகர்வோர் நேரடியாக குறைந்த விலை மருந்துகளை இறக்குமதி செய்துகொள்ள அனுமதி இல்லை.
ஆனால்,நுகர்வோர், காப்பீடு நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் சார்பில், தனியார் நிறுவனங்கள் மருந்து நிறுவனங்களோடு குறைந்த விலையில் மருந்துகளை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையினை நடத்த அதிகமாக வாய்ப்பு வழங்கப்படும்.
"மருந்துகளின் விலையுயர்வுக்கு மருந்து உற்பத்தியாளர்கள், காப்பீட்டு நிறுவனங்கள், விநியோகஸ்தர்கள், மேலாளர்கள் போன்று அநேகர் உடந்தையாக இருக்கிறார்கள் என்றும், இந்த முறைகேடுகளை கண்டுகொள்ளாமல் இருந்ததினால் கடந்த அரசாங்கங்களுக்கும் இதில் பொறுப்புண்டு. ஆனால், இந்த அரசாங்கம் அமெரிக்க நோயாளிகளின் நலனை முன்னிறுத்தும்," என்று டிரம்ப் கூறியுள்ளார்.
அதிபரின் இந்த உரைக்குப் பிறகு பல மருந்து நிறுவனங்கள் மற்றும் உயிரிதொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளின் விலை உயர்ந்துள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com