H-4 EAD ஹெச்-4 ஈஏடி: ஜூன் மாதம் வெளியாகிறது வரைவு கொள்கை
அமெரிக்காவில் ஹெச்-1 பி விசாதாரர்களின் வாழ்க்கை துணைகளுக்கு பணியாற்றும் அனுமதி வழங்கும் ஹெச்-4 ஈஏடி விசா நடைமுறையில் மாற்றம் கொண்டு வருவதற்கு டிரம்ப் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான வரைவு கொள்கை ஜூன் மாதம் வெளியிடப்படலாம் என்று தெரிகிறது.
ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்தபோது கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் ஹெச்-4 ஈஏடி விதி அறிமுகப்படுத்தப்பட்டது. ஹெச்-1 பி விசாதாரர்கள் 'கிரீன் கார்டு' பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டிருந்த நிலையில், அவர்தம் கணவர் அல்லது மனைவியான வாழ்க்கை துணை அமெரிக்காவில் பணிபுரிய ஹெச்-4 ஈஏடி அனுமதி வழங்கியது. இதற்கு முன்னர், ஹெச்-4 விசாவில் வாழ்க்கை துணை அமெரிக்காவில் தங்கலாம். ஆனால் பணிபுரிய முடியாது என்ற நிலை இருந்தது.
ஹெச்-4 ஈஏடி வழங்க ஆரம்பித்த 2015 மே முதல் 2017 டிசம்பர் வரை 1,18,000 இந்தியர்கள் இதனை பெற்றுள்ளனர். மொத்த எண்ணிக்கையில் இது ஏறத்தாழ 94 சதவீதமாகும்.
இந்த வரைவு கொள்கை வெளியான பிறகு 30 முதல் 60 நாட்கள் பொதுமக்களின் கருத்துக்காக வைக்கப்படும். இதன் முழு செயல்பாடு முடிய பல மாதங்கள் ஆகலாம். இதில் வழக்குகள் எழுந்தால் மேலும் தாமதம் ஏற்படலாம். ஆகவே, இப்போது இருக்கும் நிலையில் ஹெச்-4 ஈஏடி கேட்டு விண்ணப்பிக்கலாம் என்று குடிபுகல் வழக்குரைஞரான எமிலி நியூமென் கூறியுள்ளார்.
"வழக்கமாக அரசு இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொள்ளும்போது, நிலுவையில் இருக்கும் செயல்பாடுகளுக்கு சில விதிவிலக்குகள் அளிக்கப்படும். உதாரணமாக, பல மாதங்கள் செல்லத்தக்கதான ஈஏடி வைத்திருக்கும் பணியாளர்கள், பணியில் நீடிக்க முடியும். கொள்கை வரைவு வெளிவரும்போது இது குறித்து தெளிவான விளக்கங்கள் கிடைக்கும்,"என்று இன்னொரு வழக்குரைஞரான டேவிட் நாச்மேன் கூறியுள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com