பாஜக-வுக்கு துணை போனதா தேர்தல் ஆணையம்? அதிர்ச்சி கிளப்பும் ட்வீட்!
கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக-வுக்கு தேர்தல் ஆணையம் துணை போயுள்ளதா என்று சந்தேகம் கிளப்பும் அளவுக்கு ஒரு ட்வீட் அமைந்துள்ளது.
கடந்த 12-ம் தேதி கர்நாடக மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் மற்றும் பாஜக-வுக்கு இடையில் நேரடி போட்டி இருந்தாலும், மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிக்கும் குறிப்பிடத்தக்க செல்வாக்கு இருந்தது.
இதனால், மும்முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கணித்தது போலவே 222 தொகுதிகளில் முடிவுகள் இன்று வெளிவந்து கொண்டிருக்கின்றன. பாஜக, சுமார் 100 இடங்களுக்கும் மேல் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 70 தொகுதிகளிலும், மஜக 40 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.
இதுவரை வெளிவந்துள்ள முடிவை வைத்துப் பார்க்கும் போது, தொங்கு சட்டப்பேரவை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பாஜக வெற்றிக்கு தேர்தல் ஆணையம் துணை போயுள்ளதா என்று சந்தேகம் கிளப்பும் அளவுக்கு ஒரு ட்வீட் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
நியூஸ் 18 செய்தி தொலைக்காட்சி சில மணி நேரங்களுக்கு முன்னர், `பதாமி தொகுதியில் இருக்கும் ஓட்டலில் 1000-த்துக்கும் மேற்பட்ட அஞ்சல் வழி ஓட்டுகள் இருக்கும் கவர்கள் சிக்கியுள்ளன. இந்த ஓட்டல் பாஜக நிர்வாகி ஒருவருடையது.
மேலும், அந்த ஓட்டலில் தங்கி இருந்தவர்கள் பாஜக-வைச் சேர்ந்தவர்கள்’ என்று ஒரு ட்வீட்டை பதிவிட்டு அதிர்ச்சி கிளப்பியது. ஆனால், சில மணி நேரத்திலேயே இந்த ட்வீட் நீக்கப்பட்டது. ஆனால், ட்வீட்டின் ஸ்க்ரீன்-ஷாட் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பதாமி தொகுதியில் கர்நாடக முதல்வராக இருந்த சித்தராமையா போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com