இழந்த பெயரை ஈட்டும் முயற்சியில் ஃபேஸ்புக் - 200 செயலிகளுக்கு தடை

பயனாளர்களின் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படுகின்றனவா என்ற ஆய்வின் ஒரு கட்டமாக, ஃபேஸ்புக், 'மைபர்சனாலிட்டி' என்ற உளவியல் சோதனை செயலி உட்பட 200 செயலிகளை தனது தளத்தில் செயல்பட தற்காலிகமாக தடைசெய்துள்ளது.

2016-ம் ஆண்டு டொனால்டு ட்ரம்ப்பின் வெற்றிக்கு உதவியாக செயல்பட்ட கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் எட்டு கோடியே எழுபது லட்சம் ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை திருடி பயன்படுத்தியது தெரிய வந்தது.

பயனாளர்களின் தகவல்களை பாதுகாக்கும் வண்ணம் 2014-ம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் தன்னுடைய கொள்கைகளை மாற்றியமைத்தது. ஆனால், கொள்கை மாற்றியமைக்கப்படும் முன்பு இருந்ததுபோலவே சில செயலிகளுக்கு ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை பயன்படுத்தும் வசதி இருப்பது தெரிய வந்துள்ளது.

“எங்கள் நிறுவனத்தை சார்ந்த வல்லுநர்களோடு வெளியிலிருந்தும் வல்லுநர்கள் அழைக்கப்பட்ட பல்வேறு குழுக்களாக ஆய்வு செய்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான செயலிகளை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். முழு ஆய்வுக்காக 200 செயலிகளை தற்காலிகமாக தடை செய்துள்ளோம். ஆய்வு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது” என்று ஃபேஸ்புக் துணை தலைவர் இமே ஆர்ச்சிபாங்க் தெரிவித்துள்ளார்.

இழந்த நம்பிக்கையையும், நற்பெயரையும் ஈட்டும் வண்ணம் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் இதுபோன்ற பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>