பாகிஸ்தானிய பெண் ஊடகவியலாருக்கு இந்தியாவில் தடை - மகன் கோபம்
புதுடெல்லியில் மே 10, 11 தேதிகளில் 15வது ஆசிய ஊடக மாநாடு நடந்தது. ஆசிய பசிபிக் தகவல் ஒளிபரப்பு மேம்பாட்டு கல்வி நிறுவனத்துடன் இந்திய அரசின் செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை இணைந்து இம்மாநாட்டை நடத்தியது.
இம்மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்ற பாகிஸ்தானிய புகழ்பெற்ற கவிஞர் ஃபைஸ் அஹமது ஃபைஸின் மகளும் பாகிஸ்தானிய ஊடகவியலாருமான 72 வயது மோனிஸா ஹஸ்மி அழைக்கப்பட்டிருந்தார்.
ஹஸ்மி, மாநாடு நடைபெறும் இடத்திற்கு வந்தபோது, மாநாட்டை ஏற்பாடு செய்த நிறுவனத்தினர், அவர் மாநாட்டில் உரையாற்றவோ, பங்குபெறவோ அனுமதி இல்லை என்று கூறியதாகவும், எத்தனையோ முறை காரணத்தை கேட்டும், சரியான பதில் கூறப்படவில்லை என்றும் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த தொலைபேசி பேட்டியில் கூறியுள்ளார்.
இந்தியா, இந்த மாநாட்டை நடத்துவது இதுவே முதன்முறை. பல்வேறு நாடுகளிலிருந்து 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இம்மாநாட்டில் 54 பேர் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர். அரசின் செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை இணைந்து நடத்திய இம்மாநாட்டில் அரசின் நிறுவனமான பிரசார் பாரதி பங்கேற்கவில்லை.
இது பற்றி இந்திய அரசின் வெளியுறவு துறையிலிருந்து அதிகாரப் பூர்வ கருத்து எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும், ஹஸ்மி பார்வையாளர் விசாவில் வந்தததாகவும், மாநாட்டில் பங்குபெற வேண்டுமானால், கருத்தரங்குக்கான கான்ஃபரன்ஸ் விசா இருக்க வேண்டும் என்றும் அவ்வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு தான் அழைக்கப்பட்டபோது, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இப்படி ஒரு நடைமுறை இருப்பதை தனக்கு தெரியப்படுத்தவில்லை என்றும், அந்த விசாவை பெறுவதற்கான எந்த முயற்சியையும் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ள ஹஸ்மி, இதுவரை தான் பத்துக்கும் மேற்பட்ட இந்திய மாநிலங்களில் கருத்தரங்கங்களில் கலந்து கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
"வெளிநாட்டிலிருந்து கருத்தரங்கத்தில் பங்கேற்க வருபவரிடம் இப்படியா நடந்து கொள்வது?" என்று வேதனை தெரிவித்த அவர், "இனியும் இந்தியாவிலிருந்து கருத்தரங்களில் பங்கேற்க அழைப்பு வந்தால் கலந்து கொள்வேன்," என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து, ஹஸ்மியின் மகன் அலி ஹஸ்மி, "ஃபைஸின் மகளான 72 வயதான என்னுடைய தாயாருக்கு, முறையான அழைப்புக்குப் பிறகு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுதான் உங்கள் ஒளிரும் இந்தியாவா? வெட்கம்" என்று பிரதமர் அலுவலகத்துக்கும், வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூக்கும் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com