`அமைச்சர் பதவி வேணுமா?- காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுக்கு பாஜக வலை!
கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதில் குளறுபடி நடந்து வரும் நிலையில், காங்கிரஸ் எம்.ஏல்.ஏ-க்களை தங்கள் பக்கம் இழுக்கும் வேலையில் பாஜக ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 12-ம் தேதி கர்நாடக மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் மற்றும் பாஜக-வுக்கு இடையில் நேரடி போட்டி இருந்தாலும், மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிக்கும் குறிப்பிடத்தக்க செல்வாக்கு இருந்தது.
இதனால், மும்முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 222 தொகுதிகளுக்கும் முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டன. பாஜக 106 தொகுதிகளிலும், காங்கிரஸ் 77 தொகுதிகளிலும், மஜத 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ்-மஜத கூட்டணி வைத்துள்ளன. அதே நேரத்தில் சற்று முன்னர் அம்மாநில கவர்னரைச் சந்தித்த எடியூரப்பா, `நான் நாளை முதல்வராக பொறுப்பேற்பேன்’ என்று சவால் விட்டுள்ளார்.
இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் மஜத கட்சி எம்.எல்.ஏ-க்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது பாஜக. இது குறித்து கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ அமரேகௌடா பாடில், `பாஜக தலைவர்களிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. எங்கள் கட்சிக்கு வாருங்கள், அமைச்சர் பதவி தருகிறோம் என்றனர்.
ஆனால், நான் காங்கிரஸில்தான் இருக்கப் போகிறேன். குமாரசாமிதான் எங்கள் முதல்வர்’ என்று கூறி அதிர்ச்சி கிளப்பியுள்ளார். இவை அனைத்தையும் வழக்கம் போல பாஜக மறுத்துள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com