கர்நாடகாவில் ஆப்ரேசன் கமலா 2-வை மூவ் பண்ணும் பாஜக!
கர்நாடகாவில் ஆட்சி அமைக்க பாஜக ஆப்ரேசன் கமலா-2வை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவில், பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க போட்டாபோட்டி நடைபெற்று வருகிறது.
103 இடங்கள் வென்ற பாஜக ஆப்ரேசன் கமலா-2 திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இணை அமைச்சர் அனந்தகுமார் தலைமையில் குழு அமைக்கவும் அக்கட்சி தீவிரம் காட்டி வருகிறது. இது தவிர, காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்கவும் பாஜக பேசி வருவதாக தெரிகிறது.
2008-ஆம் ஆண்டு பாஜக ஆப்ரேசன் கமலா என்ற திட்டத்தை ஏற்படுத்தி ஆட்சியைப் பிடித்தது. அவ்வாறு மீண்டும் கர்நாடகாவில் ஆட்சியை அமைக்க ஆப்ரேசன் கமலா 2 என்ற திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த திட்டத்தின்படி பணத்தாசையையும் பதவி ஆசையையும் காட்டி எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களை தன் பக்கம் இழுப்பதே ஆப்ரேசன் கமலா திட்டத்தின் நோக்கம்.
இது ஒரு புறம் இருக்க, மத சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் குமாரசாமி, பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் ஏற்கனவே முடிவு எடுத்தது போல், காங்கிரசுடன் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மூன்று கட்சிகளிடையே நிலவும் போட்டி காரணமாக, கர்நாடகா மாநிலத்தில் புதிய அரசு ஆட்சி அமைப்பதில் இழுப்பறி நீடிக்கிறது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com