கர்நாடகாவிலும் காலூன்றியது பாஜக: முதல்வர் பதவியை ஏற்றார் எடியூரப்பா
கர்நாடகா மாநிலத்தின் 23வது முதலமைச்சராக எடியூரப்பா பதவி ஏற்றார்.
கர்நாடகா மாநிலத்தில் கடந்த 12ம் தேதி 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றதை அடுத்து கடந்த 15ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியிடப்பட்டது.இதில், பாஜக 104 இடங்களை கைப்பற்றியது. தொடர்ந்து, காங்கிரஸ் 79 தொகுதிகளிலும், மஜத கட்சி 38 தொகுதிகளிலும் வெற்றிப்பெற்றது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததை அடுத்து, மஜதவுடனான ஆதரவு யாருக்கு கிடைக்கிறதோ அவர்களுகே ஆட்சி அமைக்க உரிமை உள்ளது என்ற சூழல் உருவானது.
இந்நிலையில், பாஜகவை ஆட்சி அமைக்க வரும்படி கவர்னர் வஜூபாய் வாலா அழைப்புவிடுத்தார். அதன்படி, பெங்களூருவில் இன்று பதவி ஏற்பு விழா நடந்தது. அம்மாநில ஆளுநர் வாஜூபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார். அங்கு திரண்டிருந்த பா.ஜ.க தொண்டர்கள் ஆரவாரம் எழுப்பி தங்களது மகிழ்ச்சி வெளிப்படுத்தினர். முதலமைச்சராக பதவி ஏற்ற எடியூரப்பாகவுக்கு உயர் அதிகாரிகள் மலர் கொத்துக்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். பதவியேற்பு விழாவை ஒட்டி, ஆளுநர் மாளிகை அருகே பாஜகவினர் இனிப்புகளை வழங்கியும், நடனமாடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பெரும்பான்மையை நிரூபிக்க அரசு அமைந்த நாள் முதல் 15 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com