கர்நாடக தேர்தல்: ஒட்டுமொத்த தமிழர்களுக்காக குரல் கொடுத்த பொன்னார்

கர்நாடகாவில் பாஜக-வின் எடியூரப்பா இன்று காலை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.

இது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று பார்க்கப்பட்டு வரும் நிலையில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் கருத்து கவனம் பெற்றுள்ளது. கடந்த 12-ம் தேதி கர்நாடக மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது.

காங்கிரஸ் மற்றும் பாஜக-வுக்கு இடையில் நேரடி போட்டி இருந்தாலும், மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிக்கும் குறிப்பிடத்தக்க செல்வாக்கு இருந்தது. இதனால், மும்முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

222 தொகுதிகளுக்கும் முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டன. பாஜக 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், மஜத 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ்-மஜத கூட்டணி வைத்தன.

அதே நேரத்தில், `நாங்கள் தான் தனிப் பெரும் கட்சியாக விளங்குகிறோம். எனவே எங்களைத்தான் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுக்க வேண்டும்’ என்று பாஜக தரப்பு கூறியது. பாஜக-வால் நியமிக்கப்பட்ட கவர்னர் எதிர்பார்த்தது போலவே எடியூரப்பாவை முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

எடியூரப்பா, இன்னும் 2 வாரங்களில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். பெரும்பான்மைக்கு இன்னும் 8 எம்.எல்.ஏ-க்கள் தேவைப்படுகின்றனர் என்பதால், பாஜக குதிரைபேரத்தில் ஈடுபடும் என்று பரவலாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்கள் இல்லாத போதும், பாஜக-வை ஆளுநர் ஆட்சி அரியணையில் ஏற்றி இருப்பதை அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இதையொட்டி பொன்.ராதாகிருஷ்ணன், `கர்நாடக மாநிலத்தின் 23வது முதல்வராக பதவியேற்ற மதிப்பிற்குரிய திரு.எடியூரப்பா அவர்களுக்கு எனது சார்பாகவும், ஒட்டுமொத்த தமிழர்களின் சார்பாகவும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றுள்ளார்.

'ஒட்டுமொத்த தமிழர்களின் சார்பாக’ என்ற வாக்கியமே தற்போது நெட்டிசன்களால் கேலி செய்யப்பட்டு வருகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

 

More News >>