நண்பர்களுக்கு மது சப்ளை: விமானத்திலிருந்து இறக்கப்பட்ட பயணி

விமானம் புறப்படும் முன்னதாக மது கேட்டு வாங்கிய முதல் வகுப்புப் பயணி ஒருவர், அதை சாதாரண (எகனாமிக்) வகுப்பிலிருந்த தனது நண்பர்களுக்குக் கொடுக்க முயன்றதால் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டார். கடந்த சனிக்கிழமை பிலடெல்பியாவிலிருந்து அட்லாண்டா சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதே விமானத்தில் பயணித்த கேட்டி ஜெண்டர் என்ற பயணி, இது குறித்து இணையதளம் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

சம்பவ தினத்தன்று, விமானத்தில் முதல் வகுப்பில் ஏறிய பயணி, நடைமுறைகள் நிறைவுற்று விமான கதவு மூடப்படும் முன்னதாக விமான பணியாளரிடம் மது கேட்டு அருந்தியுள்ளார். மீண்டும் ஐஸ் போடப்பட்ட இரண்டு மதுபானங்கள் கேட்டுள்ளார். ஆனால், பணியாளர், "ஒருமுறை ஒரு மதுபானம் மட்டுமே கொடுக்கப்படும்," என்று தெரிவித்துள்ளார்.

அப்படியே விமானம் புறப்படும் முன்னதாக, இரண்டிரண்டாக மூன்று முறை கேட்டு வாங்கிய அவர், மதுபானங்களை எகனாமிக் வகுப்பிலிருந்த தன் நண்பர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு சென்றுள்ளார். விமான பணியாளர், அவரை தடுத்துள்ளார். அப்போது, தான் கழிப்பறையை பயன்படுத்த செல்வதாக பயணி கூறியுள்ளார்.

 பணியாளர், முதல் வகுப்பு பயணிகள், விமானத்தின் முன் பக்கமுள்ள கழிப்பறையையே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியதால், தன் இருக்கைக்குத் திரும்பிய பயணி, எகனாமிக் வகுப்பிலிருந்த நண்பர்களுக்கு குறுஞ்செய்தி (டெக்ஸ்ட்) அனுப்பியுள்ளார். சாதாரண வகுப்பிலிருந்த நண்பர், முதல் வகுப்புக்கு வந்துள்ளார். விமான பணியாளர் விசாரித்தபோது, அவரும் கழிப்பறையை பயன்படுத்த வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. அவரை விமானத்தின் பின்பக்கத்தில் உள்ள கழிப்பறையை பயன்படுத்துமாறு பணியாளர் அனுப்பியுள்ளார். 

விமானம் புறப்படுவதற்கான நேரத்திற்கும் பத்து நிமிடங்கள் கழித்து, விமான நிறுவனத்தின் பிரதிநிதி உள்ளே வந்து, குறிப்பிட்ட அந்த முதல் வகுப்பு பயணியை வெளியே அழைத்து பேசியுள்ளார். அதற்குப் பின்பு உள்ளே வந்த பயணி, தனது உடைமைகள் எடுத்துக் கொண்டு கீழே இறங்கியுள்ளார். அதன்பிறகு விமானம் கிளம்பியுள்ளது. எகனாமிக் வகுப்பிலிருந்த அவரது இரண்டு நண்பர்களும் தொடர்ந்து விமானத்தில் பயணித்தனர் என்று கேட்டி ஜெண்டர் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>