ஆதார் எண் இணைக்க மாரச் 31 வரை காலக்கெடு நீடிப்பு
டெல்லி, டிச.7: அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீடிக்க முடிவு செய்து மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு திட்டங்களை அமலுக்கு கொண்ட வந்தார். இதில், ஆதார் கார்டு அறிமுகமும் ஒன்று. ஆதார் கார்டு என்பது 12 இலக்கு எண் பொருந்திய சுய அடையாள அட்டை ஆகும். இந்த ஆதார் எண்ணை அரசின் திட்டகளுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்காக கடந்த ஆகஸ்டு மாதம் 31ம் தேதி வரை காலக்கெடு வைத்தது. இதன் பிறகு, டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டித்தது. இதற்கிடையே, சமூக ஆர்வலர் ஒருவர் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற மத்திய அரசு ஆணை என்பது ஜனநாயக நாட்டில் குடிமகனின் உரிமையை பறிக்கும் வகையில் அமைந்திருக்கிறது என்றும், இதனால் ஆதார் எண் இணைப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதன் வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி விசாரணையில் உள்ளது. ஆதார் எண் இணைக்க மத்திய அரசு அறிவித்த காலக்கெடு நெருங்கி வரும் நிலையில், அரசு வழங்கும் சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் இணைக்க அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதில், தொலைபேசி எண்களுடன் ஆதார் எண் இணைப்பதற்கான தேதி உச்ச நீதிமன்றம் அறிவிக்கும் வரை பிப்ரவரி 6ம் தேதி என்பது நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.