இளவரசர் திருமணம்: மும்பை டப்பாவாலா-க்களின் புதுமைக் கொண்டாட்டம்!
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மற்றும் மறைந்த இளவரசி டயானாவுக்கு பிறந்த இரண்டாவது மகனான ஹாரிக்கும் அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லே-வுக்கு வருகிற சனிக்கிழமை பிரிட்டனில் கோலாகலமாகத் திருமணம் நடைபெற உள்ளது.
நீண்ட கால காதல் ஜோடிகளின் திருமணத்துக்கு ராணி எலிசபெத் சம்மதம் தெரிவித்த பின்னர் இத்திருமணம் இருவீட்டார் ஒப்புதலுடன் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில், இளவரசர் ஹாரி- மேர்க்லே தம்பதியினரின் திருமணத்தை வித்தியாசமாகக் கொண்டாட உள்ளதாக மும்பை டப்பாவாலா-க்கள் தெரிவித்தனர்.
மும்பையின் முக்கியப் பகுதிகளில் சைக்கிள் மூலம் மதிய உணவு அளிக்கும் டப்பாவாலாக்கள், மும்பையில் மூன்று மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு ஒரு வேளை உணவு தர இருப்பதாக சமீபத்தில் அறிவித்தனர்.
இந்நிலையில், மேலும் ஒரு கொண்டாட்ட நிகழ்வாக டப்பாவாலா-க்கள் அனைவரும் இணைந்து இளவரசர் ஹாரிக்கு பிரபலமான ‘கோலாபூரி பேட்டா’ என்றழைக்கப்படும் ஒரு வகை மராட்டிய தலைப்பாகையை பரிசளிக்க உள்ளனர்.
கூடுதலாக வருங்கால இளவரசி மார்க்லேவுக்கு பைதானி பட்டுப்புடவை ஒன்றையும் பரிசளிக்க உள்ளனர். இளவரசர் சார்லஸ்- டயானா தம்பதியினரின் திருமணத்துக்கும் மும்பை டப்பாவாலா-க்களுக்கு சிறப்பு அழைப்புவிடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com