பாவம் பார்க்காதே, வெளியேற்று - அமெரிக்க நீதித்துறைக்கு உத்தரவு
நாட்டை விட்டு வெளியேற்றும் வழக்குகளை நிர்வாகரீதியாக முடித்து வைக்கக்கூடாது என்று அமெரிக்க குடிபுகல் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளுக்கு அட்டர்னி ஜெனரல் ஜெஃப் செசன்ஸ் உத்தரவிட்டுள்ளார்.
‘நிர்வாக ரீதியாக முடித்து வைத்தல்’ என்ற நடைமுறை அமெரிக்க நீதித்துறையில் இருந்து வருகிறது. நீதிபதிகளின் பணிச்சுமையை குறைக்கும் வண்ணம், அதிக முக்கியத்துவமில்லாத வழக்குகள் இந்த நடைமுறையில் முடித்து வைக்கப்பட்டன. இந்த நடைமுறையை பயன்படுத்தி முடித்து வைப்பதன் சட்டப்பூர்வ அனுமதி காலாவதியான பின்னரும் அமெரிக்காவில் தங்கியிருப்பவர்கள் தொடர்ந்து அங்கே குடியிருக்க வாய்ப்பு இருந்தது.
முன்னாள் அதிபர் பராக் ஒபாமா காலத்தில், கடைசி ஆறு ஆண்டுகள் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் இப்படி முடித்து வைக்கப்பட்டன. அமெரிக்காவில் நீண்ட நாட்கள் வாழ்ந்து வருபவர்கள், அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களின் குழந்தைகள், வாழ்க்கைதுணை அல்லது வேலைபார்க்க அனுமதி பெற்றவர்கள் குற்றப் பின்னணி இல்லாதவர்களானால், அரசாங்கமோ அல்லது அமெரிக்க குடிமகனோ கேட்டுக்கொள்ளும் பட்சத்தில் வழக்குகள் இப்படி முடித்து வைக்கப்பட்டன.
கடநத் வியாழன் அன்று மத்திய அமெரிக்க நாடான கௌதமாலாவைச் சேர்ந்த ஆதரவில்லாத சிறுவன் ஒருவன் குறித்த வழக்கு தொடர்பாக அட்டர்னி ஜெனரல் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். ‘நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்களா, இல்லையா என்றே கேள்வியே இல்லை. சட்டப்பூர்வமான அனுமதி இல்லையா, வெளியேறு’ என்று டிரம்ப் அரசு உறுதியாக கூறுகிறது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com