இன்னும் ஏழு பேர்...ஆறு மணி நேரம்...இது எடியூரப்பாவுக்கான சவால்!

கர்நாடகா முதல்வர் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள இன்னும் ஆறு மணி நேர அவகாசமே முதல்வர் எடியூரப்பாவுக்கு உள்ளது.

கடந்த 12-ம் தேதி கர்நாடக மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் மற்றும் பாஜக-வுக்கு இடையில் நேரடி போட்டி இருந்தாலும், மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிக்கும் குறிப்பிடத்தக்க செல்வாக்கு இருந்தது.

இதனால், மும்முனை போட்டி நிலவியது. இறுதியில் 222 தொகுதிகளில் பாஜக 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், மஜத 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ்-மஜத கூட்டணி வைத்தன. அதே நேரத்தில், `நாங்கள் தான் தனிப் பெரும் கட்சியாக விளங்குகிறோம். எனவே எங்களைத்தான் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுக்க வேண்டும்’ என்று பாஜக தரப்பு கூறியது.

பாஜக-வால் நியமிக்கப்பட்ட கவர்னர் பலரும் எதிர்பார்த்தது போலவே எடியூரப்பாவை முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார். இதற்கு அடுத்ததாக எடியூரப்பா தலைமையிலான அரசு தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து இன்று மாலை 4 மணி அளவில் நடக்கும் நம்பிக்கையில்லா தீர்மான வாக்குப்பதிவு எடியூரப்பாவுக்கு சவால் நிறைந்ததாகவே உள்ளது. காங்கிரஸ்- மஜக எம்.எல்.ஏ-க்கள் 24 மணி நேர ரிசார்ட் வாசத்துக்குப் பின் இன்று ஊர் திரும்பியுள்ளனர். இவர்களில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் மூவர் கம்பி நீட்டிவிட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், கடைசி நேரத்தில் பாஜக எந்த ஒரு எல்லைக்கும் செல்லும் என்பதே தேசிய அரசியலாளர்களின் கருத்து.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>