பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா!

பாஜக-வைச் சேர்ந்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா, இன்று மாலை 4 மணிக்கு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.

இந்நிலையில், எடியூரப்பா வாக்கெடுப்புக்கு முன்னரே பதவியை ராஜினாமா செய்தார். இது குறித்து முன்னதாகவே, கன்னட டிவி சேனல்கள் செய்தி வெளியிட்டன. கடந்த 12-ம் தேதி கர்நாடக மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது.

காங்கிரஸ் மற்றும் பாஜக-வுக்கு இடையில் நேரடி போட்டி இருந்தாலும், மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிக்கும் குறிப்பிடத்தக்க செல்வாக்கு இருந்தது. இதனால், மும்முனை போட்டி நிலவியது. இறுதியில் 222 தொகுதிகளில் பாஜக 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், மஜத 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ்-மஜத கூட்டணி வைத்தன.

அதே நேரத்தில், `நாங்கள்தான் தனிப் பெரும் கட்சியாக விளங்குகிறோம். எனவே எங்களைத்தான் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுக்க வேண்டும்’ என்று பாஜக தரப்பு கூறியது. பாஜக-வால் நியமிக்கப்பட்ட கவர்னர் பலரும் எதிர்பார்த்தது போலவே எடியூரப்பாவை முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

இதற்கு அடுத்ததாக எடியூரப்பா தலைமையிலான அரசு தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 104 எம்.எல்.ஏ-க்களை மட்டும் வைத்துக் கொண்டு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்பதால், பாஜக குதிரைபேரத்தில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதற்கு அச்சாரமாக அமைந்துள்ளது எடியூரப்பா பேசியுள்ளதாக லீக் ஆகியிருக்கும் ஆடியோ பதிவு. நிலைமை எடியூரப்பாவுக்கும் பாஜக-வுக்கும் எதிராக சென்று கொண்டிருப்பதால், அவர் 4 மணிக்கு முன்னரே பதவி விலகுவார் என்று கன்னட சேனல்கள் சில செய்தி வெளியிட்டன.

அதன்படி, எடியூரப்பா  தனது பதவியை ராஜினாமா செய்தார். அப்போது அவர் 13 பக்கங்கள் கொண்ட கடிதத்தை படித்தார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>