சுழற்சி முறையில் முதல்வர் பதவியா? விளக்கும் குமாரசாமி!
கர்நாடகா முதல்வர் பதவி பகிர்ந்தளிக்கப்படுமா என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ளார் கர்நாடகாவின் புதிய முதல்வராக உள்ள குமாரசாமி.
கடந்த 12-ம் தேதி நடந்த கர்நாடக மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 222 தொகுதிகளில் பாஜக 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், மஜத 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ்-மஜத கூட்டணி வைத்தன. அதே நேரத்தில், `நாங்கள் தான் தனிப் பெரும் கட்சியாக விளங்குகிறோம். எனவே எங்களைத்தான் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுக்க வேண்டும்’ என்று பாஜக தரப்பு கூறியது.
இதையடுத்து தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற விதியுடன் மூன்று நாள் முதல்வரானார் எடியூரப்பா. நேற்று மாலை தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் பதவி விலகினார்.
இதையடுத்து மஜத-வின் குமாரசாமி முன்னர் அறிவித்தது போலவே காங்கிரஸ் உடனான கூட்டணியில் முதல்வராகப் பதவியேற்பதி உறுதியானது. வருகிற 21-ம் தேதி பதவிப்பிரமானமும் நடக்கிறது.
இந்நிலையில் முதல்வர் பதவி குறித்து குமாரசாமி கூறுகையில், “கடந்த 2007-ம் ஆண்டு பாஜக உடனான கூட்டணியின் போது சுழற்சி முறையில் முதல்வர் பதவி என்ற பேச்சால் நான் வீழ்ந்தது எல்லாம் போதும். காங்கிரஸ் உடனான கூட்டணியில் முதல்வர் பதவி சுழற்சி முறையில் பகிரப்படுவதற்கான எந்தப் பேச்சுவார்த்தையும் ஒப்பந்தமும் இல்லை” என உறுதிபடுத்தினார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com