ஆஃப்கான் கிரிக்கெட் அரங்கில் வெடிகுண்டுத் தாக்குதல்

ஆஃப்கான் கிரிக்கெட் அரங்கில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் பார்வையாளர்கள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆஃப்கான் கிழக்கு மாகாணமான நாங்கராரின் ஜலாலாபாத் அரங்கில் பகலிரவு கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது, அடுத்தடுத்து வெடிகுண்டுகள் வெடித்ததால் ஜலாலாபாத் பகுதி முழுவதும் அசாதாரண சூழல் நிலவியது. இந்த கொடூர தாக்குதலில் பார்வையாளர்கள் 8 பேர் உயிரிழந்ததோடு, 45 பேர் காயமடைந்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயர வாய்ப்பிருப்பதாக அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், கிழக்கு ஆஃப்கான் பகுதியில் தாலிபன் மற்றும் ஐஎஸ் அமைப்பினர் அண்மைக் காலமாகவே தொடர் தாக்குதல்களை முன்னெடுத்து வருவதால், தற்போதைய தாக்குதலுக்கும் இந்த இரண்டு அமைப்புகளில் ஒன்றே காரணமாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.

ஆஃப்கானில் அரசப்படையினரை எதிர்த்து நேரடியாக மோததுணிவும் படை பலமும் இல்லாததால் கிளர்ச்சியாளர்கள் இதுபோன்ற வெடிகுண்டுத் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களோடு மக்களாக கிளர்ச்சியாளர்கள் கலந்திருப்பதால் அவர்களை தனித்தனியே அடையாளம் காண்பதில் ஆஃப்கான் அரசுக்கு தொடர்ந்து நெருக்கடி நிலவி வருகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>