எல்லாம் முடிந்த பின்னர் களத்துக்கு வந்த `வேங்கையன் மகன்!
கர்நாடகாவில் நடந்த அரசியல் சலசலப்பு குறித்து இன்று தனது கருத்தைத் தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
கடந்த 15-ம் தேதி கர்நாடக தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. பாஜக-வுக்கு பெரும்பான்மை இல்லாத போதும், ஆளுநர் அக்கட்சியை ஆட்சி அமைக்க அழைத்தார். ஆனால், உச்ச நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பான வழக்கில், உடனடியாக மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு எடியூரப்பாவுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், நேற்று வாக்கெடுக்குப்புக்கு முன்னரே பதவி விலகினார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா. இதையடுத்து, காங்கிரஸ்-மஜத கூட்டணியின் சட்டமன்றத் தலைவர் குமாரசாமி நாளை முதல்வராக பதவியேற்க உள்ளார்.
இந்த அரசியல் கேலிக்கூத்து நிறைவடைந்துள்ள நிலையில், நிதானமாக வந்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார் ரஜினி. அரசியல் கட்சி தொடங்கவுள்ள ரஜினி, தொடர்ந்து தன் ஆதரவாளர்களையும், தனது மக்கள் மன்ற நிர்வாகிகளையும் சந்தித்து வருகிறார். இன்று மகளிர் அணி நிர்வாகிகளை சந்தித்தார்.
அவர்களுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, `நேற்று கர்நாடகத்தில் நடந்தது ஒரு ஜனநாயக வெற்றி. பாஜக கூடுதல் நேரம் கேட்பதும், அதற்கு கவர்னர் செவி மடுத்த 15 நாட்கள் அவகாசம் கொடுப்பதும் ஜனநாயகத்தை எள்ளி நகையாடுதலாகும்.
இந்த விஷயத்தில் ஜனநாயகத்தைத் தூக்கிப் பிடித்த உச்ச நீதிமன்றத்துக்கு எனது வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளார். கர்நாடகா கவர்னர் எடியூரப்பாவுக்கு 15 நாள் டைம் கொடுத்தது கேலிக்கூத்து என்று கூறியிருக்கிறார் ரஜினிகாந்த். இதைச் சொல்ல அவருக்கு 15 மணி நேரம் தேவைப்பட்டிருக்கிறது. ( எடியூரப்பா வெற்றி பெறுவார் எனக் காத்திருந்தாரோ?)
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com