ராயல் திருமணத்தை வரமாக நினைக்கும் பிரிட்டன் மக்கள்!
ராயல் திருமணத்தை நேரில் காணும் வாய்ப்பு தங்களுக்கு கிடைத்த வரம் என பிரிட்டன் மக்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.
இளவரசர் ஹாரி- அமெரிக்க முன்னாள் நடிகை மேகன் திருமணத்தைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான பிரிட்டன் உள்நாட்டு மக்கள் வின்ஸர் பகுதியில் குவிந்தனர்.
காலை நேரத்தில் பலர் வருகை தந்த நிலையில், சிலர் இரவிலிருந்தே தங்களது பார்வையாளர் இடத்தை பிடித்துக் கொண்டனர். கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க இவர்களுக்கான பாதுகாப்பு பணிகளும் கண்ணும் கருத்துமாக முன்னெடுக்கப்பட்டன.
உள்ளூர் மக்கள் ஒருபுறமிருக்க, வெளிநாடுகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ராயல் திருமணத்தைக் காண பிரிட்டனுக்கு விரைந்தனர். இவர்களின் வசதிக்காக பிரத்யேக ரயில் மற்றும் சிறப்பு ரயில் முனையங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.
உள்ளூர்-வெளியூர் மக்கள் அனைவரும் ஓரிடத்தில் ஒன்றுதிரண்டதும் ஆங்காங்கே ஸ்ட்ரீட் பார்ட்டீக்கள் நடத்தப்பட்டன. இதில், முதலாவதாக லீட்ஸ் மற்றும் ரோண்டாவில் நடைபெற்ற பார்ட்டீக்களில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கலந்துகொண்டு ஹாரி-மேகன் தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, நாட்டினாம்ஷைர் தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குழந்தைகள் மூலம் ராயல் திருமணம் சித்தரிக்கப்பட்டது. இதேபோல், லிஸ்போன், எடின்பர்க், வொர்த்திங் பகுதிகளிலும் கொண்டாட்டங்கள் களைகட்டின.
ராயல் திருமணத்தின் தாக்கம் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. மும்பையில் உள்ள கிங் எட்வர்ட் மெமோரியல் மருத்துவமனை வளாகத்தில், மதிய உணவு வினியோக கூலியாட்களால் இனிப்புகள் மற்றும் உணவு வழங்கப்பட்டு ராயல் திருமணம் கொண்டாடப்பட்டது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com