மோசமான தோல்வியைப் பதிவுசெய்த மும்பை அணி- விரக்தியில் கேப்டன் ரோகித்
நடப்பு ஐபிஎல் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை யாரும் எதிர்பாராத விதமாக டெல்லி டேர்டெவில்ஸ் அணி இந்த சீசனிலிருந்து வெளியேற்றியது.
கடந்த ஞாயிற்றுக் கிழமை இந்த இரு அணிகளுக்கும் இடையில் டெல்லியின் ஃபெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்தப் போட்டியில் டெல்லி அணி, மும்பையை 11 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
லீக் சுற்றில் 14 போட்டிகளில் விளையாடி மும்பை அணி, 6 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 12 புள்ளிகள் மட்டுமே பெற்றது. இந்த ஐபிஎல் சீசன், மும்பை இந்தியன்ஸுக்கு மட்டும் மோசமானதாக அமையவில்லை. ரோகித் ஷர்மாவுக்கும் இது போதாத சீசன்தான். மும்பை இந்தியன்ஸ் கேப்டனான ரோகித் ஷர்மா, 11-வது ஐபிஎல் சீசனை ஒரு மோசமான சாதனையுடன் நிறைவு செய்துள்ளார்.
ரோகித் இந்த ஐபிஎல் சீசனில் மொத்தமாகவே 286 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களில் அவர் 300 ரன்களைக் கூட கடக்காமல் ஒரு தொடரை முடிப்பது இதுவே முதல் முறையாகும். அவரது பேட்டிங் சராசரி 23.83 மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரோகித்தைப் பொறுத்தவரை, 2013-ம் ஆண்டு ஐபிஎல் தான் மிகச் சிறந்ததாக அமைந்தது. அந்த ஐபிஎல் சீசனில் 19 போட்டிகளில் 538 ரன்கள் குவித்தார். அந்த சீசனில் அவரது பேட்டிங் சராசரி 38.42 ஆகும். அதேபோல, இதுவரை நடந்த 11 ஐபிஎல் சீசன்களில் 5 முறை 400 ரன்களை கடந்துள்ளார் ரோகித்.
ஐபிஎல் 11-வது சீசனில், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய நான்கு அணிகளே ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன. டெல்லி உடனான கடைசி போட்டியில் மும்பை வென்றிருந்தால், அடுத்தச் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பு பிரகாசமாக இருந்திருக்கும். ஆனால், புள்ளிகள் தரவரிசைப் பட்டியலில் கடைசியில் இருந்த டெல்லி டேர்டெவில்ஸ் அணியிடம் மண்ணைக் கவ்வியது மும்பை என்பதைத்தான் மும்பை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com