சொந்தப் பணத்தில் வாங்கிய விமானத்தில் சேவைப்பணி

1 லட்சத்து 50 ஆயிரம் டாலர் சொந்த சேமிப்பு பணத்தை போட்டு எம்சிஆர் 4 வகை ஒற்றை எஞ்ஜின் விமானம் வாங்கி அதை அகதிகள் மீட்புப் பணிக்கென பயன்படுத்தி வருகின்றனர் பிரான்ஸ் தேசத்தை சேர்ந்த இரு விமானிகள்!

ஜோஸ் பெனவென்ட், பெனோய்ட் மிகோலன் இருவரும் 2006-ம் ஆண்டு விமான பயிற்சியில் சந்தித்தது முதல் நண்பர்கள். தற்போது பெனவென்ட் முழுநேரமும் தன்னார்வ பணி செய்து வருகிறார். மிகோலன் விமானியாக பணிபுரிந்து வருகிறார்.

25 ஆண்டுகளுக்கு மேலாக சேவைப்பணியில் இருக்கும் பெனவென்ட்டுக்கு தற்போது 49 வயது. 15 ஆண்டுகளுக்கு முன்பு, சர்வதேச செஞ்சிலுவை சங்கப் பணியில் இருந்தபோது, தப்பிப் பிழைப்பதற்காக கடல் வழியே செல்லும்போது உயிரிழப்போருக்கு ஏதேனும் செய்தாக வேண்டும் என்ற எண்ணம் தனக்குள் எழுந்ததாக அவர் கூறுகிறார்.

ஐரோப்பாவையும் வட ஆப்பிரிக்காவையும் பிரிக்கும் மத்திய தரைக்கடல் பகுதியில் அகதிகள் நடமாட்டத்தை கவனித்து, ஆபத்தில் இருப்போருக்கு உதவும் பணியில் ஈடுபட்டுள்ள இவர்கள், தங்கள் விமானத்துக்கு 'வானம்பாடி' என்று பெயரிட்டுள்ளனர். காட்டில் எரியும் தீயை அணைக்க, சொட்டு சொட்டாக நீரை எடுத்து வரும் வானம்பாடி குறித்து ஒரு பழைய அமெரிக்க கதை இருக்கிறதாம். 'என்ன செய்கிறாய்?' என்று மற்ற மிருகங்கள் கேட்டபோது, 'ஏதோ என்னால் இயன்றதை செய்கிறேன்,' என்று அந்தக் கதையில் வானம்பாடி சொல்லும். அதை எண்ணி எங்களால் முடிந்த சேவையை செய்யும் நாங்கள், விமானத்துக்கு 'வானம்பாடி' என்று பெயர் வைத்துள்ளோம் என்கிறார்கள் விமானி நண்பர்கள்.

2015-ம் ஆண்டில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் கடல் வழியே இத்தாலி மற்றும் கிரீஸ் நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம், துருக்கி மற்றும் லிபியா ஆகிய நாடுகள் எடுத்துள்ள நடவடிக்கையால் இந்த எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது. ஆனாலும், ஆபத்தின் மத்தியிலும் மக்கள் கடந்து செல்லும் பகுதியாக மத்திய தரைக்கடல் இருந்து வருகிறது.

சர்வதேச குடிபெயர்தல் அமைப்பின் கணக்குப்படி, கடந்த ஆண்டு மட்டும் 1,71,635 பேர் கடல் வழியாக ஐரோப்பாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். மூவாயிரத்துக்கும் அதிகமானோர் இதுபோன்ற முயற்சியில் இறந்துள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 600 பேர் இறந்துள்ள நிலையில், 23,715 பேர் உயிர்தப்பி வேறு நாடுகளில் குடியேறியுள்ளனர்.

2015-ம் ஆண்டில் சிரியாவை சேர்ந்த மூன்று வயது சிறுவன ஆய்லன் குருடி துருக்கி கடற்கரையில் உயிரிழந்து கிடந்த புகைப்படம் தன் மனதை வெகுவாக அசைத்ததாக சேவை விமானி பெனவென்ட் கூறுகிறார். கடந்த மே 12-ம் தேதி முதல் இவ்விமானம் தன் சேவையை தொடங்கியுள்ளது. மால்டா தீவிலிருந்து பறந்து, படகுகளை கண்காணித்து வருகிறது. இந்த நல்ல உள்ளங்களை நாமும் வாழ்த்துவோம்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

More News >>