அமீரகத்திற்கு 10 ஆண்டு குடியிருப்பு விசா அறிமுகமாகிறது

சர்வதேச முதலீட்டாளர்கள் மற்றும் மிகச்சிறந்த திறமை வாய்ந்த தொழில் வல்லுநர்கள், மாணவர்களுக்கு அமீரகத்தில் பத்து ஆண்டுகள் குடியிருக்கக்கூடிய விசா வழங்க இருப்பதாக அமைச்சரவை அறிவித்துள்ளது.

ஐக்கிய அமீரகத்தின் துணை அதிபரும், பிரதமரும் துபாய் மன்னருமான ஷேக் முகமது பின் ராஷித் அல் மாக்டோம் தலைமையிலான அமைச்சரவை, புதிய விசா வழங்கும் இந்த நடைமுறைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

"ஐக்கிய அமீரகம் மிகச்சிறந்த திறமைகளை வளர்த்துக்கொள்ளும் இடமாக, சர்வதேச முதலீட்டாளர்களின் நிரந்தர உறைவிடமாக தொடர்ந்து விளங்கும். திறந்த சூழல், சகிப்புத் தன்மை, உள்கட்டமைப்பு மற்றும் வளைந்து கொடுக்கும் சட்ட அமைப்பு ஆகியவை உலகளாவிய முதலீடுகளையும், சிறந்த திறமையாளர்களையும் ஈர்க்கும்," என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அமீரகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கான விசா வழங்கப்படும். மிகச்சிறந்தவகையினரான இனங்காணப்படும் மாணவர்களுக்கு பத்து ஆண்டுகளுக்கு விசா வழங்கப்படும். மருத்துவம், அறிவியல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப துறையினருக்கும் பத்து ஆண்டுகள் விசா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள், பயிற்சி பெற வாய்ப்பு வழங்கும் வகையில் படிப்பு காலம் முடிந்த பிறகும் குடியிருக்கும் காலத்தை நீட்டித்துக்கொள்வதை பரிசீலனை செய்வதற்கும் இப்புதிய சட்டம் வழி செய்யும் என்று தெரிகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>