உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு 3 லட்சம் நிதி - டிடிவி தினகரன்

தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 13 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் படு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், துப்பாக்கி சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை டிடிவி. தினகரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ஒவ்வொரு வார்டாகச் சென்று காயமடைந்தவர்கள் மற்றும் அவர்ளின் குடும்பத்தினரிடம் அது தொடர்பான விபரங்களை கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த தினகரன் “தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் “தூத்துக்குடியில் இருந்து காவல்துறை வெளியேறவும், ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். துப்பாக்கிச் சூடு தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து விசாரணை நடத்த வேண்டும்” என்றும் தினகரன் அப்போது கேட்டுக்கொண்டார்.

இதேபோல, திமுக சார்பில் தலா ரூ 2 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>