ஹவாய் எரிமலை வெடிப்பு - தொடரும் அச்சுறுத்தல்

ஹவாய் கிலேவியா எரிமலை வெடிப்பின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. உச்சகட்டமாக, எரிமலையிலிருந்து வெளிப்பட்ட குழம்பு, தேசிய நெடுஞ்சாலை எண் 137ஐ கடந்து பசிபிக் பெருங்கடலை அடைவதால் நிலைமை மோசமாகி உள்ளது.

முந்திய காலத்தில் இதுபோன்ற நேரங்களில் ஆபத்து நேர்ந்திருப்பதால் எரிமலை குழம்பான லாவா, கடலை அடையும் இடங்களுக்குச் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. நுரையீரல், கண் மற்றும் தோல் அரிப்பு மற்றும் அழற்சிக்கு இது காரணமாகலாம். சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தும் விளையக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

லாவா கடலை எட்டும் பகுதியில் 300 மீட்டர் சுற்றளவு பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று கடலோர காவல்படை கேட்டுக்கொண்டுள்ளது. அதன் லெப்டினன்ட் கமாண்டர் ஜாண் பனான், "லாவாவின் அருகில் செல்வது கொடிய காயத்தை அல்லது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும்," என்று எச்சரித்துள்ளார்.

கிலேவியா எரிமலை வெடிப்பு 10,000 அடி உயரத்துக்கு சாம்பலை அள்ளி வீசியுள்ளது. மே 3-ம் தேதி நடந்த மாபெரும் வெடிப்புக்கு பிறகு ஏறத்தாழ 2,250 முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது என்று வானிலை வல்லுநர் ஹார்லே பிரிங்க் கூறியுள்ளார். எரிமலை குழம்பு அடர்த்தி சற்று குறைந்து ஓடக்கூடிய திரவ நிலையில் இருப்பதாக இன்னொரு வல்லுநர் அல்லிசன் சின்சார் கூறுகிறார்.

எரிமலை வெடிப்புடன், பல்வேறு இடங்களில் நிலத்தில் ஏற்பட்டுள்ள வெடிப்புகள் வழியாக எரிமலை குழம்போடு நச்சுத்தன்மை வாய்ந்த சல்பர் டை ஆக்ஸைடு வாயுவும் வெளி வந்து கொண்டிருக்கிறது. சில இடங்களில் பழைய வெடிப்புகள் வழியாகவும் எரிமலை குழம்பு மீண்டும் வெளிவர ஆரம்பித்துள்ளது.

இதுவே உண்மையான அச்சுறுத்தல் என ஹவாய் எரிமலை கண்காணிப்பு வாரியம் எச்சரித்துள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>