தூத்துக்குடி படுகொலை... வளைகுடா தமிழர்கள் மே 26ல் போராட்டம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து சான்பிரான்ஸிக்கோ மாகாணத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் அமெரிக்கா வாழ் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையினால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் புற்றுநோய், நுரையீரல் பாதிப்பு, சரும பிரச்னை உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். உயிரையே குடிக்கும் அளவிற்கு ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் மக்கள் அவதிப்படுகின்றனர். இதனால், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் முதல் அம்மாவட்ட மக்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், மே 22-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் 100வது நாள் போராட்டத்தை பெரிய அளவில் நடத்தினர். அப்போது போராட்டக்காரர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலைகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர். இவர்களை போலீசார் தடுக்க முயன்றதால், இருதரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது பின்னர், மோதலாகி போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால், கல் வீச்சு தாக்குதல்களும், கண்ணீர் புகை குண்டுகள் வீச்சும் நடந்தது. தாக்குதலின் உச்சகட்டத்திற்கு சென்ற போலீசார் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில், பலர் குண்டு காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திலேயே 9 பேர் பலியாகினர். இதன்பிறகு மருத்துவமனையில் சிகிச்சைபலனின்றி 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு, பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதைதொடர்ந்து இரண்டாவது நாளான நேற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் இறந்தவர்களின் உடல்களை வாங்க வந்திருந்து பொது மக்கள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தடியடியை தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர் இதில், மேலும் ஒரு இளைஞர் பலியானார். இதனால், பலியானோரின் மொத்த எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.

இந்த சம்பவத்திற்கு பிறகு தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 27-ஆம் தேதி காலை 8 மணி வரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மாவட்டம் முழுவதும் பதற்றமான சூழ்நிலையே நிலவி வருகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தினால் ஏற்பட்ட படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்கா வாழ் தமிழர்கள் மே 26-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுப்படபோவதாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்க வாழ் தமிழர்கள் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே 22-ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது அப்பாவி மக்களை கொன்று குவித்ததற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த 100 நாட்களாக அம்மாவட்ட மக்கள் அமைதி வழியில் போராடினார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்றபோது காவல்துறையினர் நடத்திய கொலைவெறி துப்பாக்கிச் சூடு நடவடிக்கையில் 17வயது சிறுமி உள்பட 10க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் உள்ளனர். அடிப்படை தேவையை தான் மக்கள் கேட்கின்றனர். மக்களை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை.

இந்நிலையில், அப்பாவி மக்களை கொல்லப்பட்டது தொடர்பாக மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும். பொது மக்கள் உயிரிழந்ததற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். புற்றுநோய், சரும பிரச்னை மற்றும் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு முழுமையான சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

ஒழுக்கக்கேடான வணிகத்தில் ஈடுபட்டுள்ள அனில் அகர்வால் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைத்து, மே 26-ஆம் தேதி கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள இந்திய தூதரகம் முன்பு போராட்டத்தில் ஈடுப்பட உள்ளோம். பின்னர், ஸ்டெர்லைட் ஆலையை முற்றிலுமாக மூட வலியுறுத்தி இந்திய தூதரகத்தில் மனு கொடுக்க உள்ளோம்” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் நிச்சயம் வெற்றிபெறும் என்று தி சப்எடிட்டர் நிருபரிடம் அமெரிக்க வாழ் தமிழர்கள் உறுதிபட தெரிவித்தனர்.

https://www.facebook.com/groups/bayareatamils/permalink/194584181172035/

More News >>