தமிழகத்தில் 815 டாஸ்மாக் கடைகள் திறக்க ஏற்பாடுகள் தீவிரம்
உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதை அடுத்து தமிழகத்தில் முதல்கட்டமாக 815 டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகள் திறந்து வைத்திருப்பதால் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வந்தன. இதனால்,தேசிய மற்றும் மாநில நெடுங்சாலைகளின் ஓரங்களில் இயங்கி வந்த டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து சுமார் 3000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
இதன்பிறகு, தேசிய மற்றும் நெடுஞ்சாலைகளை நகராட்சி சாலைகளாக வகைமாற்றம் செய்து மதுக்கடைகளை திறக்கலாம் என கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், கடந்த ஆண்டு தமிழகத்தில் 1700 டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டது.
ஆனால், வகை மாற்றம் செய்யாத நிலையிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டிருப்பதாகவும் அதனை உடனடியாக மூட உத்தரவிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் முதல்கட்டமாக 815 டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, டாஸ்மாக் கடைகளை திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதற்கான மாவட்ட மேலாளர்கள் கூட்டம் இன்று நடத்தப்படுகிறது என்றும் டாஸ்மாக் சங்கத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com