துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு டுவின்சிட்டீஸ் தமிழ் அசோசியேசன் இரங்கல்!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்திப் போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அமெரிக்காவிலுள்ள ட்வின்சிட்டீஸ் தமிழ் அசோசியேசன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் காற்றும் நீரும் மாசடைந்து தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாராப்பகுதிகளில் வாழும் மக்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் அன்றாட வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதால், அந்த ஆலையை அகற்ற வேண்டி ஊர் மக்கள் அறவழிப் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
மக்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாக 99-நாள் அமைதியாக நடைபெற்ற போராட்டத்தின் தொடர்ச்சியாக 100-வது நாள் ஏற்பட்ட போராட்டத்தில், காவலர்களின் துப்பாக்கித் தோட்டாவிற்கு பலியாகி உயிர் இழந்த 13 பேர் குடும்பத்தினருக்கு, ட்வின்சிட்டீஸ் தமிழ் அசோசியேசன் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஒரு ஜனநாயக நாட்டில் அறப்போராட்டங்கள் மக்களின் அடிப்படை உரிமை. அவர்களைக் காக்க வேண்டியது அரசின் தலையாய கடமை. இது போன்ற சூழல் இனி எப்போதும் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்று தமிழக அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுக்கின்றோம்.” இவ்வாறு அந்த இரங்கள் செய்திக்குறிப்பில் தெரிவிக்ப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com