தூத்துக்குடியில் மீண்டும் பதற்றம்...

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் அங்கு மீண்டும் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையில் முடிந்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதைதொடர்ந்து, தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பேருந்துகளும் வழக்கம்போல் இயங்கவில்லை. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

இதன்பிறகு நேற்று, தூத்துக்குடி மாவட்டம் சற்று இயல்பு நிலைக்கு மாறி வந்தது. இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நேற்று மர்ம நபர்கள் சிலர் பேருந்துக்கு தீ வைத்து எரித்தனர். இதனால், அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் பதற்றம் தணிவதற்குள், இன்று மீண்டும் பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், குளத்தூர் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் இன்று அதிகாலை 2 மணி அளவில் மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசி சென்றனர். குண்டு காவல் நிலையின் வாசலில் வெடித்து சிதறியது. இந்த சம்பவம் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், பெட்ரோல் குண்டு வெடிப்பில் உயிர் சேதம் எதுவம் ஏற்படவில்லை. இந்த இரு சம்பவங்களை தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் வன்முறைக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் பொது மக்களை மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>