தூத்துக்குடி படுகொலை... மின்னசோட்டா தமிழர்கள் ஆர்ப்பாட்டம்!

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தில் 13 பேர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து அமெரிக்காவின் மின்னசோட்டாவில் உள்ள தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்கள் கண்டன வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாகச் சென்றனர். பின்னர், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிட மௌன ஆஞ்சலி செலுத்தப்பட்டது.

மின்னசோட்டாவின் தலைநகர் செயின்ட் பாலில் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், “போராட்டம் இது போராட்டம் மின்னசோட்டாவின் போராட்டம், மாட்டுக்காக சேர்ந்த கூட்டம் மனிதனை அழித்தால் விடுவோமா?, உப்பை நாங்கள் தருவோமா உயிரை எடுத்தால் விடுவோமா” என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, சிகாகோவில் உள்ள இந்திய தூதரகத்தில் கொடுப்பதற்காக தயாரிக்கப்பட்ட மனுவில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கையெழுத்திட்டனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>