பழைய ரேஷன் கார்டு இனி செல்லாது... செல்லாது...!
ஜனவரி முதல் தேதியிலிருந்து ஸ்மார்ட் கார்டு இல்லாதவர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருள்கள் வழங்கப்படாது என்று பொது வினியோகத் துறை அறிவித்துள்ளது.
ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளைத் தவிர்க்க, தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இதில் தமிழகத்தில் 60 சதவிகிதம் பேருக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மற்றவர்களுக்கு வழங்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஆனால், சில மாதங்களாக ஸ்மார்ட் கார்ட் வழங்கும் பணி மிகவும் தொய்வடைந்துள்ளதாகவும், மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த மாநில அரசு சுணக்கம் காட்டுவதாகவும் புகார்கள் எழுந்தன. இந்நிலையில், ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணிகளை வரும் டிசம்பர் 30-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஜனவரி முதல் தேதியிலிருந்து ஸ்மார்ட் கார்டு உள்ளவர்களுக்கு மட்டுமே ரேஷன் கடைகளில் பொருள்கள் வழங்க வேண்டும். பழைய ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்குப் பொருள்கள் வழங்கக்கூடாது என அனைத்து அதிகாரிகளுக்கும் அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆகவே, ஸ்மார்ட் கார்டு இல்லாதவர்கள் இந்த மாதம் 30-ம் தேதிக்குள் அதைப் பெற்றுக்கொண்டு பொருள்களை வாங்க வேண்டும் என அதில் கேட்டுக்கொண்டுள்ளது. 3 லட்சத்து 20 ஆயிரம் ஸ்மார்ட் கார்டுகள் பிழையாக வழங்கப்பட்டதாகவும், அவை அனைத்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.