அமெரிக்காவில் 700 அடி பள்ளத்தில் காருடன் விழுந்த பெண்!
கலிபோர்னியாவில் சான் பெர்னார்டினோ கவுண்ட்டி மலைப்பகுதியில் காருடன் விழுந்த பெண், தீயணைப்புத் துறையினரால் உயிருடன் மீட்கப்பட்டார்.
18வது நெடுஞ்சாலையில் தெற்கு நோக்கி 26 வயது பெண் ஒருவர் காரில் சென்று கொண்டிருந்திருக்கிறார். மாலை 5:45 மணியளவில் அவர் இடப்பக்கமாக திரும்பியபோது, கார் 700 அடி ஆழமான பள்ளத்தாக்கினுள் விழுந்ததுள்ளது.
விபத்தைக் குறித்து நெடுஞ்சாலை ரோந்து படையினருக்கு அப்பெண் செல்பேசி மூலம் தெரிவித்துள்ளார். ஆனால், சரியான இடத்தை குறிப்பிட அவரால் இயலவில்லை. அவரது செல்பேசி மூலம் கிடைத்த சமிக்ஞையை கொண்டு ரோந்து படையினர் விபத்து நடந்த இடத்தை கண்டுபிடித்ததாக கலிபோர்னியா நெடுஞ்சாலை ரோந்து படையின் ஜூவன் க்யூன்டரோ கூறியுள்ளார்.
"மிகுந்த ஆழத்தில் அடர்ந்த மரங்களினிடையே வைக்கோல் போரினுள் ஊசியை தேடுவதுபோல அப்பெண்ணை கண்டுபிடித்தோம். எங்களிடமிருந்த 500 அடி நீளமுள்ள கயிற்றோடு இன்னொரு கயிற்றை கட்டி அவர் இருக்குமிடத்தை அடைந்து மீட்டோம்," என்று மீட்புப் படையின் தலைவர் பாப் இவான்ஸ் தெரிவித்துள்ளார்.
அப்பெண்ணை மருத்துவமனையில் சேர்த்துள்ள ரோந்து படையினர், விபத்துக்கான காரணத்தை குறித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com