மெட்ரோவில் நிரம்பிய மக்கள் கூட்டம்: 3 நாளில் 3 லட்சம் பேர் பயணம்
மெட்ரோ ரயிலின் இரண்டு புதிய வழித்தடங்களில் இலவச பயணம் அறிவித்ததை அடுத்து, மூன்று நாட்களில் 3 லட்சம் பேர் குவிந்தனர்.
நேரு பூங்கா - சென்னை சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையே மெட்ரோ சேவையை கடந்த வெள்ளிக்கிழமை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சேவை தொடங்கிய அன்று மட்டும் 50 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். மெட்ரோ ரயில் புதிய வழித்தடத்தின் தொடக்க விழாவை முன்னிட்டு முதல் மூன்று நாட்களுக்கு மக்கள் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இதனால், மகிழ்ச்சியடைந்த பயணிகள், விடுமுறை நாட்கள் என்பதால் குழந்தைகளை அழைத்துக் கொண்டு மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர். இதன்மூலம், மூன்று நாட்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
குறிப்பாக, சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் மற்றும் சின்னமலை முதல் டிஎம்எஸ் மற்றும் விமான நிலையம் வரையில் மட்டும் 50 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். ஆனால், இரண்டாவது நாளில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பானது. நேற்று முன்தினம் மட்டும் மெட்ரோ ரயிலில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 500 பேர் பயணம் செய்தனர்.தொடர்ந்து, மூன்றாம் நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை 6 மணி முதலே பொது மக்களின் வருகை தொடங்கியது. இதன்மூலம், சுமார் ஒன்றரை லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
மெட்ரோ ரயில் நிர்வாகம் இலக்கு நிர்ணயித்ததுபோல், மூன்று நாட்களில் மூன்று லட்சம் பேர் குவிந்தனர். தொடர்ந்து, நேற்றுடன் இலவச சேவை முடிந்ததை அடுத்து, இன்று முதல் பயணத்திற்கான கட்டணத்தை செலுத்தியே மக்கள் பயணிக்க முடியும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com