ஆலைக்கு சீல் வைத்த நடவடிக்கை துரதிர்ஷ்டவசமானது: ஸ்டெர்லைட் நிர்வாகம்
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தமாக மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்து, ஆலைக்கு சீல் வைத்த நடவடிக்கை துரதிர்ஷ்டவசமானது என்று ஸ்டெர்லைட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலை இயக்கப்பட்டு வந்ததன் மூலம், அப்பகுதியில் உள்ள மக்கள் புற்றுநோய் உள்பட பல வியாதிகளுக்கு ஆளாகி உள்ளனர். உயிருக்கே உலை வைக்கும் இந்த ஸ்டெர்லைட் ஆலை அவசியமா ? என்று பொங்கி எழுந்த மக்கள் பல ஆண்டுகளாக போராடி வந்தனர்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் மீண்டும் எழுச்சி அடைந்தது. தொடர்ந்து 100 நாட்களாக போராடி வந்தனர். நூறாவது நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்ட மாபெரும் போராட்டம் நடைபெற்றது.அமைதியாக நடைபெற்று வந்த போராட்டத்தில், போலீசாரின் இடையூரலால் வன்முறை வெடித்தது. போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் பிறகு, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தது.
இந்நிலையில், மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியிடப்படுவதாக தமிழக அரசு தெரிவித்தது. இதன் பிறகு, அரசாணை வெளியிட்ட சில மணி நேரங்களில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நந்தூரி உடனடியாக ஸ்டெர்லைட் ஆலைக்கு சென்று சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.இதற்காக, தூத்துக்குடி மக்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தது தொடர்பாக ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், “ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூட உத்தரவிட்டது துரதிர்ஷ்டவசமான முடிவு. கடந்த 22 ஆண்டுகளாக வெளிப்படைத்தன்மையுடன் ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் நடத்தி வந்தோம். தமிழக அரசின் அரசாணையை படித்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம் ” என்று குறிப்பிட்டிருந்தது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com