இந்திய வங்கிகளுடன் இணைந்து களம் இறங்குகிறது வாட்ஸ்அப்!
வாட்ஸ்அப் புத்தம்புது வசதிகளுடன் அடுத்த வாரம் மீண்டும் அப்டேட் செய்யப்படுகிறது.
2014-ம் ஆண்டு சுமார் 1.26 லட்சம் கோடி ரூபாய்க்கு வாட்ஸ்அப் உரிமையை ஃபேஸ்புக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக விலைக்கு வாங்கியது. அதன் பின்னர் வாட்ஸ்அப் வசதிகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.
இந்நிலையில், ஃபேஸ்புக் பக்கங்களில் உள்ள வசதிகளைவிட வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு அதீத நவீன வசதிகளை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார் மார்க் சக்கர்பெர்க். இந்திய சமூக வலைதளமான 'ஹைக்' பிரபலமானதாக இருந்தாலும் இந்தியாவைப் பொறுத்தவரையில் வாட்ஸ்அப் பெற்ற இடத்தை வேறெந்த வலைதளங்களாலும் பெற முடியவில்லை.
இத்தனை காலம் ஈமோஜிக்கள் நிறைந்த வாட்ஸ்அப், இனி வரும் காலங்களில் 'ஹைக் ஸ்டிக்கர்ஸ்' போல் 'வாட்ஸ்அப் ஸ்டிக்கர்ஸ்' உடன் கலக்கக் காத்திருக்கிறது. மேலும் ஒருவருக்கு ஒருவர் மட்டுமே வீடியோ கால் செய்யும் வசதி, இனிமேல் 'க்ரூப் வீடியோ கால்' ஆக மேம்பட உள்ளது.
மேலும், வாட்ஸ்அப் மூலமே இனி பயனாளர்கள் பணப்பரிமாற்றம் செய்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் பேமன்ட் வசதி மூலமாக நீங்கள் சுலபமாக பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபடலாம். இதற்காக வாட்ஸ்அப், ஐசிஐசிஐ, ஹெச்.டி.எஃப்.சி, ஆக்சிஸ் ஆகிய வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.