ஓட்டல் மாடியில் இருந்து குதித்த பள்ளி மாணவிகள் : ஒருவர் பலி மற்றொருவர் கவலைக்கிடம்
சேலம்: தனியார் ஓட்டல் மாடியில் இருந்து குதித்த பள்ளி மாணவிகளில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். சிகிச்சையில் அனுமதித்துள்ள மற்றொரு மாணவி உயிருக்கு போராடி வருகிறார். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம், பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் சக்திவேல் மற்றும் ஜெயராஜ். இவர்களது மகள்கள் கவிஸ்ரீ மற்றும் ஜெயராணி. மகள்கள் இருவரும் அரிசிப்பாளையத்தில் உள்ள பெண்கள் தனியார் மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற மாணவிகள் இருவரும் மாலை வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் ஆச்சமடைந்த தந்தையர்கள் இருவரும் சேலம் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் தங்களது மகள்களை காணவில்லை என்று புகார் தெரிவித்தனர். இதையடுத்து, புகாரை பதிவு செய்த போலீசார் மாணவிகளை தேடி வந்தனர்.
ப்போது, சேலத்தின் மையப்பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றின் மாடியில் இருந்து மாணவிகள் இருவர் குதித்ததாக போலீசாருக்கு தகவல் வந்திது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாடியில் இருந்து குதித்தது சக்திவேல் மற்றும் ஜெயராஜின் மகள்கள் தான் என்பதை உறுதி செய்தனர்.
சம்பவம் குறித்து போலீசார் மாணவிகளின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.இதற்கிடையே, மாடியில் இருந்து குதித்த மாணவிகளில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொருவரை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு மாணவியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும், மாணவிகள் இருவரும் வகுப்பில் பேசிக்கொண்டே இருந்ததால் ஆசிரியர் திட்டியதாகவும் இதனால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாகவும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆசிரியர்கள் திட்டியதாக மாணவிகள் நான்கு பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவத்தின் ஈரம் இன்னும் ஆறாத நிலையில் மீண்டும் மாணவிகள் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.