சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
புதுடெல்லி: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இத்தாலியில் உள்ள லுசியானாவில் 1946ம் ஆண்டு சோனியா காந்தி பிறந்தார். தற்போது காங்கிரஸ் தலைவராக உள்ள சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவிக்க காங்கரஸ் அலுவலகத்தில் காலை முதலே தொண்டர்கள் குவிந்தனர். அலுவலகத்தின் முன்னால் அவர்கள் பட்டாசு வெடித்து சோனியா காந்தியின் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.
பிறந்த நாளை கொண்டாடி வரும் சோனியா காந்திக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் பல்வேறு கட்சி தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சோனியா காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில்,” சோனியா காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல்நலத்துடன் நீண்ட நாள் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்திருந்தார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி தற்போது பதவி வகித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக சோனியா கட்சி பணிகளில் இருந்து ஓய்வு பெற்று வருகிறார். இந்நிலையில், காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராகுல் காந்தி தலைவர் பதவி ஏற்பதை கட்சி சார்பில் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.