அமெரிக்காவில் 8,000 ஸ்டார்பக்ஸ் உணவகங்கள் மூடல்..!

ஸ்டார்பக்ஸ் நிறுவனம் தனது 8,000 உணவகங்களை நான்கு மணி நேரம் மூடியிருந்தது. "ஸ்டார்பக்ஸ் வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதப்படுகிறது," என்று வாடிக்கையாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அந்நிறுவனத்தின் சேர்மன் ஹோவர்ட் ஸ்கல்ட்ஸ் கூறியுள்ளார்.  கடந்த மாதம் அமெரிக்காவின் பிலடெல்பியாவில் ஸ்டார்பக்ஸ் உணவகத்தில் ராஷன் நெல்சன், டோண்ட் ராபின்சன் என்ற இரு ஆப்பிரிக்க அமெரிக்க இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். எந்த உணவையும் வாங்காமல் அவர்கள் உணவகத்தில் இருந்ததாகவும், கழிப்பறையை பயன்படுத்த முயற்சித்ததாகவும் கூறி, அந்த உணவகத்தின் மேலாளர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அந்தக் கைது நடவடிக்கையை எடுத்தனர். பிலடெல்பியா ஸ்டார்பக்ஸில் நடந்தது இனபாகுபாடு சம்பவம் என்று எதிர்ப்பு கிளம்பியது. ஆகவே, மே 29-ம் தேதி, தனது அனைத்து கிளைகளையும் மூடிவிட்டு எல்லா பணியாளர்களுக்கும் இனபாகுபாடு இல்லாமல் நடந்து கொள்வது குறித்து பயிற்சி அளிக்கப்படும் என்று ஸ்டார்பக்ஸ் நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி, ஸ்டார்பக்ஸின் 8,000 கிளைகள் நான்கு மணி நேரம் மூடப்பட்டு 1,75.000 பணியாளர்களுக்கு இனவேறுபாடு கருதாமல் நடந்து கொள்வது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. "பிலடெல்பியா சம்பவம், சமுதாயத்தில் ஸ்டார்பக்ஸின் பொறுப்பை உணர்த்தியது. இந்த பயிற்சி, வேறுபாடுகளை களைவதற்கு ஸ்டார்பக்ஸ் எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளின் ஒன்று. இது அடிப்படையான ஒன்று என்றாலும், எங்கள் முன்னோக்கிய பயணத்தில் நாங்கள் எடுத்து வைக்கும் முக்கியமான அடியாகும்," என்று ஸ்டார்பக்ஸ் முதன்மை செயல் அதிகாரி கெவின் ஜாண்சன் கூறியுள்ளார். மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com
More News >>