கனமழையில் வன உயிரியல் சரணாலயமான மங்களுரூ!

கர்நாடகத்தின் மங்களூரு நகரத்தில் கடந்த நான்கு நாட்களாக கன மழை பெய்து வருகிறது.

இந்த கன மழையால், மங்களூருவின் பெரும்பான்மையான சாலைகளும் தெருக்களும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. பலர் வீடுகளுக்கு உள்ளேயும் வெள்ள நீர் புகுந்துள்ளது. மழை காரணமாக, கடந்த சில நாட்களாக அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கபட்டு உள்ளது.

மேலும், மீனவர்கள் கடலுக்குப் போக வேண்டாம் என்று அறிவுறத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து, மங்களூருவில் இருக்கும் சுற்றுலா பயணிகள் கடல் பக்கத்தில் போக வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

இப்படி ஒரு புறம் இருக்கையில், மங்களூரு தெருக்களில் பல நீர் வாழ் உயிரினங்கள் சுற்றி வருவதை எத்தேச்சையாக வீடியோ எடுக்கப்பட்டு உள்ளது. ஒரு பெரிய சுறா இறந்திருப்பதையும், அதை ஒரு நபர் கொக்கி கொண்டு இழுத்துச் செல்வதையும் ஒரு காணொளியில் பார்க்க முடிகிறது.

மற்றொரு வீடியோவில், 5 அடி நீளம் கொண்ட பாம்பு ஒன்று மக்கள் வசிக்கும் தெருவில் ஹாயாக நீந்திச் செல்கிறது. பாம்புக்கு அருகாமையில் இருக்கும் மக்கள், அது கடந்து செல்வதற்காக சத்தம் போடாமல் நடுக்கத்துடன் நிற்பது இன்னொரு வீடியோவில் பதிவாகியுள்ளது.

மங்களூருவில், பேரிடர் மேலாண்மை குழுவைச் சேர்ந்த தன்னார்வலர்கள் பலர் மக்களுக்குத் தேவையான பொருட்களையும் மீட்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். அடுத்த ஓரிரு நாட்களுக்கு மங்களூருவில் தொடர்ந்து மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>