யானை மிதித்து இறந்த பாகனின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

திருச்சி சமயபுரம் கோவிலில் யானை மிதித்து பலியான பாகனின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த மூன்று ஆண்டுகளாக மசினி என்ற பெண் யானை பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த யானையை மண்ணச்நல்லூரை சேர்ந்த பாகன் கஜேந்திரன் என்பவர் பராமரித்து வந்தார். இந்நிலையில், கடந்த 25ம் தேதி யானை மசினி கோவிலில் இருந்தபோது, திடீரென பிளறி அங்கும் இங்கும் ஓடியது. இதனால், கட்டுப்படுத்த முயன்ற பாகனை மசினி தாக்கியது. இந்த சம்பவத்தில் பாகன் கஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில், யானை மசினி தாக்கி உயிரிழந்த பாகன் கஜேந்திரனின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமயபுரம் கோவில் யானை மசினி தாக்கியதில் உயிரிழந்த பாகன் கஜேந்திரன் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், யானை தாக்கி உயிரிழந்த பாகன் கஜேந்திரனின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>