தங்கத்தை விஞ்சிய தண்ணீர்.. பூட்டு போட்டு பாதுகாக்கும் மக்கள்!

வடமாநிலங்களில் தலைவிரித்தாடும் பஞ்சத்தால், தண்ணீர் சேமித்து வைத்திருக்கும் டிரம்மை பூட்டு போட்டு பாதுகாக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கோடை வெப்பம் வாட்டி வதைக்கிறது. இதனால் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது.

மக்கள் நீண்ட தூரம் நடந்து சென்று பல நூறு அடிக்கும் மேற்பட்ட ஆழம் கொண்ட கிணற்றுக்குள் இறங்கி, குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு செல்கின்றனர். மிகுந்த துயரத்திற்கு இடையே எடுத்து வரப்படும் தண்ணீர் இரவு நேரங்களில் திருடப்படுகிறது.

இதனால் தண்ணீர் சேமிக்கும் டிரம்களுக்கு பூட்டு போட்டு பாதுகாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் இமாச்சல பிரதேசம் சிம்லாவில் தண்ணீர் திருட்டில் ஈடுபட்ட ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், இது தொடர்பாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிம்லாவின் பெரும்பாலான இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.

தங்கம், வெள்ளியை போல் தண்ணீரையும் பூட்டு போட்டு பாதுகாக்க வேண்டிய கட்டாயத்திற்கு வடமாநில மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>