கிரிக்கெட் ஒரு சூதாட்ட உலகம்: பகீர் கிளப்பும் அல்-ஜசீரா
`கிரிக்கெட்ஸ் மேட்ச் ஃபிக்சர்ஸ்' என்றொரு ஆவணப் படத்தை கத்தாரை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் அல்-ஜசீரா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த ஆவணப் படத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய நாட்டு கிரிக்கெட் வீரர்களில் சிலர் மேட்ச்-ஃபிக்சிங்கில் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. கிரிக்கெட் உலகில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள இந்த விஷயத்தைப் பற்றி சர்வதேச கிரிக்கெட் சம்மேளனமும் வாய் திறந்து பேசியுள்ளது.
சூதாட்டப் புகார் குறித்து பேசியுள்ள ஐசிசி அமைப்பின் தலைவரும் முன்னாள் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் வீரருமான டேவிட் ரிச்சர்ட்சன், `கிரிக்கெட்டில் ஊழல் இருப்பது பற்றியும் சூதாட்டம் இருப்பதையும் குறித்து செய்தி வெளியிட்டுள்ள அல்-ஜசீரா நிறுவனத்திடம், அதற்குறிய ஆதாரங்களை வெளியிடுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.
ஆவணப் படத்தில் கூறியுள்ள அனைத்து விஷயங்கள் குறித்தும் முழுவதுமான புலனாய்வு நடத்தி உண்மையை வெளிக் கொண்டு வருவோம் என்று நாங்கள் உறுதி அளிக்கிறோம். ஒரு மீடியா நிறுவனத்துக்கு தங்களது ஆதாரங்களை வெளியிடுவது என்பது எவ்வளவு சிக்கல் நிரம்பிய விஷயம் என்பது எங்களுக்குத் தெரியும்.
ஆனால், அதை சரியாக பார்த்துக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். விஷயம் என்னவாக இருந்தாலும், அந்த ஆவணப் படத்தில் கூறப்பட்டுள்ளது உண்மையா பொய்யா என்று அலசி ஆராய வேண்டும். இதற்கு எங்களுக்கு அந்த ஆதாரங்கள் கிடைக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com