அமெரிக்காவில் பயணியை சுட்டுக்கொன்ற ஊபர் ஓட்டுநர்!
அமெரிக்காவில் ஊபர் ஓட்டுநர் ஒருவர் காரில் பயணித்தவரை சுட்டுக்கொன்றுள்ளார். டென்வர் நகரில் மாநில பிரதான சாலை ஒன்றில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
மைக்கேல் ஏ. ஹான்காக் (வயது 29) என்று ஓட்டுநர் இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட பயணியின் பெயர் ஹையுன் ஹிம் (வயது 45) என்று தெரிய வந்துள்ளது.
பயணத்தின்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், பயணி தன்னை தாக்கியதால் தான் சுட்டதாகவும் ஓட்டுநர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ரக்கர் எஸ்ஆர்40 ரக துப்பாக்கியால் ஓட்டுநர் சுட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
சம்பவ இடத்திலிருந்து பத்து துப்பாக்கி ரவைகளின் மேலுறைகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள ஓட்டுநர் சில ஆண்டுகளாக ஊபர் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இளைஞர் குழுவினருக்கான இல்லம் ஒன்றில் அவர் ஆலோசகராகவும் வேலை செய்கிறார். பண தேவைக்காக தன் மகன் இரு வேலைகளை செய்து வந்ததாக ஓட்டுநரின் தாயார் ஸ்டெபானி ஹான்காக் கூறியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம், டென்வர் விமான நிலையத்திற்கு செல்வதற்கு பதிலாக ஊபர் ஓட்டுநர் ஒருவர் தன்னை ஹோட்டல் ஒன்றுக்கு கொண்டுபோவதாக கூறி, வாகனத்தை விரைவாக ஓட்டியதாகவும், சிக்னல் ஒன்றில் தான் காரின் கண்ணாடியை அடித்து கூச்சல் போட்டதால், இறக்கி விட்டுவிட்டதாகவும் நான்ஸி லேயாங் என்ற சட்ட பேராசிரியர் டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.
ஊபர், ஓட்டுநரோ பயணிகளோ வாகனத்தில் ஆயுதங்களை கொண்டு செல்ல தடை விதித்திருப்பதாகவும், இச்சம்பவம் குறித்து காவல்துறையுடன் ஒத்துழைத்து வருவதாகவும் ஊபர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com